போர்க்களமானது இராமேஸ்வரம் - மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு!!!

இராமேஸ்வரம்: இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு ராமேஸ்வரத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ராமேஸ்வரம் அருகே பேருந்து ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் போதைப் பொருளை கடத்தியதாக 2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் 5 மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இது தமிழகத்தில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமேஸ்வரம் - மதுரை சாலையில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மதுரை - இராமேஸ்வரம் சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் டயர்கள் கொளுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராமநாதபுரம்- ராமேஸ்வரம் ரயில் பாதைகளில் தண்டவாளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தால் சென்னை புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் இராமேஸ்வரத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டங்களால் இராமேஸ்வரம் பகுதியே மிகுந்த கொந்தளிப்பாக பதற்றமாக காணப்படுகிறது.  
பேருந்துக்கு தீ வைப்பு இதனிடையே இராமேஸ்வரம் அருகே அக்காமடத்தில் பேருந்து ஒன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் முற்றாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  
4 ரயில் சேவைகள் இரத்து இந்த போராட்டங்களால் இராமேஸ்வரத்தில் இருந்து வெளியூர் செல்லும் சென்னை எழும்பூர், கன்னியாகுமரி, மதுரை செல்லக் கூடிய 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டிருப்பதால் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வெளியிடப்பட்ட  செய்தி-http://tamil.oneindia.com/news/tamilnadu/train-services-hit-fishermen-protest-213922.html
Published: Thursday, October 30, 2014, 19:16 [IST]