பத்து வருடங்களுக்கு முன் பார்த்த யாழ்ப்பாணம் இன்று இல்லை !!!

நன்றி- யாழ் உதயன் நாளிதழ்
யாழ்.மாவட்டத்தில் தற்போது பியர் கலாச்சாரமும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான கலாச்சாரத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என சர்வமத குழுவினர் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ். மாவட்ட சர்வமத குழுவின் மாதாந்த ஒன்று கூடல் யாழ். கிறிஸ்துராசா தேவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அதன்போதே குழுவினர் மேற்கண்டவாறு கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் இளைஞர்கள் பியர் போத்தல்களுடன் சர்வசாதாரணமாக நடமாடும் நிலை தோன்றியுள்ளது. இவ்வாறான சம்பவங்களை நாம் நேரடியாக காண்கின்றோம். அதுமட்டுமல்ல இன்று பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதும் கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவ்வாறான கலாச்சார சீரழிவான விடயங்களும் குற்றச் செயல்களும் எல்லை மீறிப் போய்க் கொண்டு இருக்கின்றது. இதனை யார் தடுத்து நிறுத்துவது? இதற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்? மாற்று நடவடிக்கைகளை யார் மேற்கொள்வது? இவற்றைத்தடுத்து நிறுத்த எவ்வாறு திட்டமிடுவது? இதற்கும் மேலாக 60% வீதமான பெண் பிள்ளைகள் சாதாரண தரத்துடன் வீட்டில் நின்று விடுகின்றனர் மீதமாக உள்ள 40% வீதம் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கின்றோமே தவிர வீட்டில் நின்ற பெண்பிள்ளைகள் என்ன ஆனார்கள் அவர்களுக்கான வேலை வாய்ப்பு என்ன என்று கூட தெரியாத நிலையில் உள்ளோம். அத்துடன் முன்னணி பாடசாலைகளில் கல்வி கற்கும் அதிகாரிகளின் பிள்ளைகளே பெரும்பாலும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைகின்றனர். அதனால் அவர்களுக்கு உதவித் தொகை கிடைப்பதில்லை. எனினும் கிராமப்புற பாடசாலைகளில் சித்தியடையும் பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும் இருப்பினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சித்தியடைவதில்லை. கலாச்சாரம் கல்வி என கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த யாழ்ப்பாணத்தை இன்று நாம் காணவில்லை.அது அழிந்து போய்விட்டது.எனவே இவ்வாறு பேசிக் கொண்டிருக்காது நாம் என்ன செய்ய முடியும் என்ற முடிவினை விரைவில் எட்ட வேண்டிய தேவை உள்ளது என குழுவினர் மேலும் தெரிவித்தனர்.