யாழ்ப்பாணத்தில் தற்போது சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கு இரு காரணங்களை மக்கள் கூறுகின்றனர்.
1.கல்சியத்தின் படிவு யாழ்ப்பாண நிலகீழ் (கிணறு) தண்ணீரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை.
2.கடும் வரட்சி. இந்த இரண்டு காரணங்களிலும் முதலாவது காரணம் பெரும் பிரச்சினையாக யாழ்ப்பாணத்தில் தற்போது உருவெடுத்துள்ளது.
யாழ்ப்பணத்தில் நிலகீழ் குடிநீரில் கல்சியப் படிவுகள் ஆரம்பகாலம் முதலே இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக குடிநீரில் கல்சியத்தின் படிவு நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் இதனால் கிணறுகளில் இருந்து எடுக்கும் நிரை குடிக்க முடியாமல் உள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
அத்துடன் தேநீர் வைப்பதற்காக நீரை சூடாக்கும் போது கல்சியம் கரைந்து நீரை சுவையற்றதாக்குவதாகவும் கொதிக்க வைக்கும் பாத்திரங்கள் கூட உடனடியாகவே பழுதடைகின்றது எனவும் மக்கள் கூறுகின்றனர்.
இதனால் தற்போது போத்தல் குடிநீரை பயண்படுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கல்சியத்தின் அளவு நிலகீழ் தண்ணீரில் அதிகரிப்பதற்கு காரணம் என்ன என்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் பரிசோதனை நடத்துகின்றனர். ஆனால் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வு செய்து அதற்கு தீர்வு காணும் திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை. வடமாகாண சபைக்கு அந்த ஆய்வுகளை செய்வதற்கான வளங்கள் மற்றும் ஆளணி இல்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேவேளை நிலத்திற்கு அடியில் உள்ள முருங்கைக் கற்கள் கடும் வரட்சியினால் உருகுவதால் கல்சியத்தின் அளவு குடிநீரில் கலப்பதாக கொழும்பு பல்கலைக்கழக புவியியல் விரிவுரையாளர் ஒருவர் கூறினார்.
யுத்த காலங்களில் பயன்படுதப்பட்ட குண்டுகளின் இராசாயணங்கள் மழை நீரில் கலந்து நிலகீழ் முருங்கைக் கற்களில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்ட அவர் ஆய்வு ஒன்றின் பின்னரே அதனை உறுதிப்படுத்தலாம் என்றும் கூறினார்.
இதற்கான சரியான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்றும் இல்லையேல் எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் குடிநீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு நோய்த்தாக்கங்கள் ஏற்படலாம் என்றும் கால்நடைகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த சில மாதங்களாக கால்நடைகள் காரணம் இன்றி உயிரிழப்பதாக யாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை யாழ் தீவுப் பகுதிகளில் குடிநீர் இல்லை என்றும் தண்ணீருடன் மண் கலந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
நன்றி: வி4தமிழ்.com