யாழ்/நல்லூர்க்கந்தன் மஹோற்சவத்தில் தமிழ்ப் பண்பாட்டைப் பேணுங்கள்! எமதருமை இளைஞர்களுக்கு அன்புமடல்!!!
அன்புமிகு தமிழ் இளைஞர்களுக்கு வணக்கம். இளைஞர் சக்தி மாபெரும் சக்தி என்பது மறுக்க முடியாத உண்மை.
இளைஞர்கள் நினைத்துவிட்டால் அது நிச்சயம் நடந்தேறும். எனவே இளைஞர்களால் மட்டுமே எங்கள் இனத்தை நல்வழிப்படுத்த முடியும்.
ஒரு காலத்தில் எங்கள் இளைஞர்கள் இன விடுதலைவேண்டிப் பெரும் போராட்டம் நடத்தினர். அதற்காக அவர்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்தனர்.
அந்தத் தியாகத்திற்குள் இருக்கக் கூடியது எல்லாம் எனது மண், எனது மக்கள், எனது இனம், எனது மொழி, எனது உரிமை என்பதாக இருந்ததேயன்றி எந்தச் சந்தர்ப்பத்திலும் அது மற்றவர்களின் உரிமையை, சுதந்திரத்தைப் பறிப்பதாக இருக்கவில்லை.
ஓர் இனம் சுதந்திரமாக, இன அடையாளத்தோடு, வாழ்வியல் உரிமைகளோடு வாழ விரும்புகிறது. இந்த விருப்பம் நியாயமானது. அந்த நியாயமான விருப்பத்தை எவரும் தடுக்கக்கூடாது.
அவ்வாறு தடுத்தால் அது தடையாகவே கருதப்படும். தடைகளை உடைத்தெறிந்தால் மட்டுமே உரிமையைப் பெறமுடியும் என்ற நிலையில் தடை செய்தவர்கள் பாதிப்படைந்திருப்பார்களே அன்றி, தமிழ் இளைஞர்கள் வேண்டி நின்ற உரிமை என்பது தமிழினத்திற்கானது என்ற உண்மைகளை யார் மறந்தாலும் தமிழ் இளைஞர்களாகிய நீங்கள் மறந்தால், தமது இன்னுயிரைத் தியாகம் செய்த எவரும் மனச்சாந்தியடைய மாட்டார்கள்.
எனவே, அன்பார்ந்த தமிழ் இளைஞர்களே!
தட்டிக் கேட்பதற்கு எங்களிடம் ஆட்கள் இல்லை என்பதற்காக கட்டுக்கோப்போடு வாழ்ந்த எங்கள் இளைஞர்களை எவரும் எந்த வழியிலும் பழுதுபடுத்த முடியாது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.
அந்த நிரூபணத்திற்கான ஒரு சந்தர்ப்பமாக இன்று கொடியேறும் நல்லூர்க் கந்தனின் மஹோற்சவ காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ் இளைஞர்கள் ஒழுக்கமானவர்கள், பண்பாடானவர்கள் என்பதை நிரூபித்து நிலைநாட்டுங்கள்.
நல்லூர்க்கந்தனின் மஹோற்சவம் என்பது தமிழினத்தின் பண்பாட்டை, விருந்தோம்பலை, வழிபாட்டின் திறத்தை உலகிற்குக் காட்டுகின்ற அற்புதமான திருநாள்.
எனவே, கந்தப்பெருமானின் மஹோற்சவத்தில் கலந்து கொள்ள வருகின்ற அத்தனை பேரும் தமிழ்ப் பண்பாட்டைப் பேணவேண்டும்.
குறிப்பாக நல்லூர்க் கந்தனின் மஹோற்சவத்தில் கலந்து கொள்ள வருகின்ற எங்கள் புலம்பெயர் உறவுகள் மேலைநாட்டுப் பண்பாட்டை; கட்டுநாயக்க விமான நிலையத்தில் கழற்றி வைத்து விட்டு, எங்கள் தாய் மண் என்ற நினைப்போடு, உரிமையோடு, உயிர்ப்போடு எங்கள் பண்பாட்டிற்கு முதன்மை கொடுங்கள்.
இவற்றை எல்லாம் எங்கள் புலம்பெயர் உறவுகளுக்கு இங்கிருக்கும் உறவுகள் சொல்லிக் கொடுப்பது அவசியமானதாகும்.
தமிழ் இனம் என்றும் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாயின்; எங்கள் தமிழினத்தின் இருப்பு நிலைபெற வேண்டுமாயின் தமிழ் இளைஞர்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
அவ்வாறாக கவனம் செலுத்தினால் எங்களை எந்தக் கொம்பர்களாலும் எதுவும் செய்யமுடியாது.
ஆகையால், அன்பார்ந்த தமிழ் இளைஞர்களே! எங்கள் இனத்தை வழிப்படுத்த முன்வாருங்கள்.
பக்தர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் நல்லூர்க் கந்தன் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அருள்மிகு கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இலங்கையிலுள்ள இந்து ஆலயங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த நல்லூர் கந்தசாமி கோவிலின் வருடாந்த உற்சவத்தின் முதலாம் திருவிழாவான கொடியேற்றம் இன்று காலை 10 மணியளவில் அடியார்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்றது.
கொடியேற்றத்தை தொடர்ந்து எம்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக உள்வீதி உலாவந்து அடியவர்களுக்கு ஆசி வழங்கினார்.
தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில் எதிர்வரும் 23ம் திகதி சப்பறத் திருவிழா இடம்பெற்று 24ம் திகதி இரதோற்சவத் திருவிழாவும் 25 தீர்த்த உற்சவமும் இடம்பெறவுள்ளது.
வரலாற்றுப் புகழ் மிக்க எம்பெருமானின் கொடியேற்ற நிகழ்வைக் காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான முருகன் அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
எம்பெருமானுக்கு தேங்காய்கள் உடைத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும், தீச்சட்டிகள் ஏந்தியும் தமது நேர்த்திக் கடன்களைச் செலுத்தி அடியவர்கள் விரதத்தை ஆரம்பித்தனர்.
அடியவர்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்து சபையால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஆலயத்தில் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.