ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றம்சாட்டு: தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-
காரைநகர் சம்பவங்கள் ராஜபக்ச
அரசாங்கத்தின் சட்டபூர்வ தன்மை இன்மையை தெளிவாக புலப்படுத்தியுள்ளதாக ஆசிய
மனித உரிமைகள் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அது விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
காரைநகரில் 11 வயது சிறுமி கடற்படையினரால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ன. இன்னொரு 9 வயது சிறுமியும் இதே அவலத்தை எதிர்நோக்கி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் வல்லுறவு குறித்த சம்பவங்கள் வெளியே தெரிய வந்ததும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர்கள் அச்சத்தின் பிடியில் வாழ்வதாகவும் தகவல் கிடைத்துள்ளன. இவ்வாறான சூழ்நிலையின் கீழேயே அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. உள்ளுர் நீதிமன்றத்திற்கு 7 சந்தேக நபர்களும் கொண்டுவரப்பட்டனர். கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தப்பட்டதாக வாக்குமூலம் அளித்த சிறுமி குற்றவாளிகளை அடையாளம் காண தவறினார்.
இந்தச் சிறுமி கடும் மன அழுத்தத்தின் கீழேயே செயற்பட்டார் என கருதுவதற்கு பலமான காரணங்கள் உள்ளன. இந்த சம்பவம் குறித்து தெரிய வந்ததும் இந்தச் சிறுமியும் அவரது பெற்றோரும் கடுமையான மிரட்டல்கள் அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளன. இது நிச்சயம் அந்த சிறுமிக்கு மன அழுத்தங்களை கொடுத்திருக்கும். வைத்திய அறிக்கை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது.
எனினும் கடற்படையினர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
படையினரால் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது மிக மோசமான குற்றச் செயல். இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதி முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதும் இந்த சம்பவம் குறித்து மேலும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இயல்பாகவே அந்தப் பகுதி மக்கள் படையினர் குறித்த அச்சத்தில் வாழ்கின்றனர். தற்போது பாரிய குற்றச் செயல் ஒன்று குறித்து முறைப்பாடு பதிவாகி உள்ளதால் அந்தப் பகுதி மக்களும் பாதிக்கப்பட்டவரும் குடும்பங்களும் மேலும் அச்சத்தின் பிடியில் வாழக் கூடும். சிறுமி குற்றவாழிகளை அடையாளம் காண தவறியதற்கு அந்த அச்சம் கூட காரணமாக இருக்கலாம். அந்த சிறுமியினதும் குடும்பத்தினர்களினதும் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் ஆபத்து ஏற்படும் என்பதால் குற்றவாழிகளை அடையாளம் காண வேண்டாம் என கூட ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கலாம்.
படையினரின் குற்றச் செயல்கள் குறித்து குற்றச் சாட்டு சுமத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது உயர் அதிகாரிகளின் கடமை. குறிப்பாக அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இந்த விடயம் மிக முக்கியமானது. ஏனெனில் அந்தப் பகுதி மக்களின் பாதுகாப்பை படையினரைத் தவிர வேறு யாராலும் உறுதிப்படுத்த முடியாது. அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதால் பொலிஸார் கூட தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது.
இதே வேளை அப்பகுதி மக்களின் பாதுகாப்பை இந்த சம்பவத்திற்குப் பின்னர் உறுதிப்படுத்துவதற்கு படையினரின் உயர் அதிகாரிகளோ குறிப்பாக கடற்படை உயர் மட்டமோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்புனர்வும் அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் உண்டு. குறிப்பாக இளம் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக.அரசாங்கம் இதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை எதனையும் எடுத்ததாக தெரியவில்லை.
அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் குற்றவாளிகளை நீதியின் பிடியிலிருந்து விடுவிப்பதை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தை பின்பற்றுவது நாட்டில் நாம் காணும் விடயம்
இராணுவத்தினருக்கு எதிராகவும் அரசிற்கு எதிராகவும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், நடவடிக்கை எடுக்கமாறு கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் வழமை போன்று அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துள்ளது.
மிக மோசமான குற்றச்செயலான பாலியல் வல்லுறவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கோ அல்லது குற்றவாளிகளை தண்டிப்பதற்கோ உரிய நடவடிக்கைகள் எதனையும் அரசு எடுக்கப்போவதில்லை .
இலங்கையில் பொது நீதி முறைமை இல்லை என்ப து நன்கு தெரிந்த விடயம், பிரிட்டிஸ் ஆட்சி காலத்திலும் அதற்கு பிந்திய இரு தசாப்த காலத்திலும் பொது நீதி முறைமையை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ளன.
முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்கான நன்கு வடிவமைக்கப்பட்ட முறைமைகள்--(அரச நிதியின் கீழ் உருவாக்கப்பட்டவை,) பொலிஸ் மற்றும் சுயாதீன பக்கச் சார்பற்ற விசாரணை முறைகள், சுதந்திரமான திறமைவாய்ந்த அர்ப்பணிப்புள்ள நீதித்துறை இவையே பொது நீதி முறைமை இன் அம்சங்களாகும். இவை அனைத்தும் தற்போது காணமல் போய் உள்ளன. இவ்வாறான அம்சங்கள் பொது வாழ்வில் இல்லை என்பது பொதுமக்களுக்கும் தெரிந்துள்ளது.
தற்போது அனைத்தும் அரசியல் பலம் மற்றும் பண பலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகிறது. சில வேளைகளில் பண பலத்திற்கு மேலாக அரசியல் செல்வாக்கு முக்கியத்துவம் பெறுகிறது. இதுவே அனைத்து இலங்கையர்களினதும் தலைவிதி. தற்போது கடற்படையினரால் இரு சிறுமிகள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக வரும் செய்திகளும் தமது தலைவிதி எத்தகையது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளன.
செயற்பட்டுக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நீதி முறைமையின் கீழ் நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகளை கருத்தில் கொள்ளும் போது இலங்கையே இந்த விடயத்தில் மிகவும் பின்தங்கிய சமூகமாக காணப்படுகின்றது.
எனினும் இந்த விடயம் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தை பெறவில்லை.
இலங்கை சட்டம் ஒழுங்கு நிலவாத நாடு என தனிப்பட்ட ரீதியில் முனுமுனுப்புகள் காணப்பட்டாலும், நீதியை காணமற்போகச் செய்வதற்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையிலான எதிர்ப்புணர்வுகள் எதனையும் காணமுடியவில்லை.
பொது நீதி முறைமையின் உதவி இல்லாத பட்சத்தில் அது அடிமைதனத்திற்கே வழிவகுக்கும், மேலே குறிப்பிட்ட பாலியல் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்காததும் இலங்கை மக்களுக்கும் அடிமைகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இல்லை என்பதை புலப்படுத்தியுள்ளது.
பொது நீதி முறைமையை செயற்பட அனுமதிக்காத எந்த அரசும் சட்டபூர்வமான அரசாக இருக்க முடியாது. ஒரு அரசாங்கம் ஒன்ற நீதி முறைமையை வேண்டும் என்றே திட்டமிட்டு அழிக்கும் போது நிலைமை இன்னும் மோசமடைகிறது. காரைநகரில் நடைபெற்ற சம்பவங்கள் மூலம் ராஜபக்ச அரசாங்கத்தின் சட்டபூர்வ தன்மையின்மை தெளிவாக புலப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளது.
நன்றி: தமிழில் குளோபல் தமிழ்ச் செய்தி