தேர் முட்டியடியில் ஓய்வூதியர்கள் வழமைபோலக் கூடினார்கள். அன்றைக்கு
வன்னியப்புவோடு கிளாக்கரும், சிங்கள மாஸ்டரும் இருந்தார்கள். கிளாக்கர் 83 யூலை
மட்டும் தென்னிலங்கையிலேயே இருந்தவர். நிறையச் சிங்களத் தொடர்புகள் உண்டு.
பின்னாளில் தமிழர்களுடைய போராட்டத்தின் தீவிர விசுவாசியாக மாறியவர். சிங்கள
மாஸ்டர் சிங்கள ஊர்களில் அரச ஊழியராக இருந்தவர். மூன்று மொழிகளிலும் புலமை
கொண்டவர். ஒரு கலாரசிகர். சிங்களத் திரைப்படங்களோடு அதிகம் பரிச்சயமுடையவர். 83
யூலையோடு ஊருக்குத் திரும்பி இயக்கங்களில் மொழிபெயர்ப்பாளராயும் சிங்கள
ஆசிரியராயும் இருந்தவர். அதனாலயே சிங்கள மாஸ்டர் என்று அறியப்பட்டவர். முதலில்
கிளாக்கர் தான் கதையைத் தொடக்கினார். |
கிளாக்கர்: ஒரு சிங்கள நெறியாளர் எங்கட பிரச்சினையைப் பற்றி படம்
எடுத்திருக்கிறார். முந்தியும் உப்பிடிச் சில படங்கள் எடுத்திருக்கிறார்.
பௌர்ணமி நிலவில் மரணம் எண்ட படத்தை நான் பார்த்தனான். யாழ்ப்பாணத்தில சில
வருசங்களுக்கு முன்னம் இன்னொரு படம் ஆகாசத் தாமரை எண்டு.... ராஜா தியேட்டரில
போட்டுக் காட்டினவை.
|
சிங்கள மாஸ்டர்: ஓ.. நீங்கள்
கதைக்கிறது பிரசன்ன விதானகேயைப் பற்றி. எனக்கு அவரத் தெரியும். நல்ல
கெட்டிக்காரர். உலகத் தரத்தில படம் எடுக்கிற ஒரு ஆள். அவரையும் அவரைப் போல
படமெடுக்கிற வேற சில சிங்கள நெறியாளர்களையும் கறுப்புப் படம் எடுக்கிறவை எண்டு
சிங்கள இனவாதிகள் முத்திரைகுத்தி வைச்சிருக்கிறாங்கள். |
வன்னியப்பு: அதென்ன கறுப்புப் படம்? |
சி. மாஸ்டர்: தங்கட இனத்திற்கு எதிராக படமெடுக்கிறவை எண்டு அர்த்தம். |
வன்னியப்பு: அப்ப உவர் பிரசன்ன சிங்களவருக்கு எதிரானவரே. |
கிளாக்கர்: ஓம் அவர் ஒரு இனவாதியில்லை. |
சி.மாஸ்டர்: சமாதான காலத்தில வன்னிக்கெல்லாம் வந்து போனவர். |
|
|
கிளாக்கர்: ஆனா அதுக்காக அவர்
புலியின்ர ஆளுமில்லை. |
வன்னியப்பு:
அப்ப அவர் யார்? |
சி.மாஸ்டர்: அவர்
ஒரு தரமான கலைஞர். இனவாதியில்லை. ஆனா தமிழ்த் தேசியவாதியுமில்லை. |
கிளாக்கர்: ஒரு சிங்களவன் ஏன் தமிழ்த் தேசியவாதியா இருக்கோணும்? அவன் சிங்கள
இனவாதியா இல்லையெண்டாலே போதும்தானே. சிங்கள இனவாதியா இல்லாத எல்லாரும்
தமிழருக்கு நண்பர்கள்தானே. |
வன்னியப்பு: அப்ப ஏன் அவற்ற படத்தை எதிர்த்தவங்கள். |
கிளாக்கர்: யார் எதிர்த்தது?
|
சி.மாஸ்டர்: தமிழ் நாட்டிலவுள்ள
தீவிர தேசியர்களாம். |
கிளாக்கர்:
இல்லையாமே. தாங்கள் எதிர்க்கேல்லை எண்டு அவங்கள் சொல்லுறாங்களே. எந்தவொரு
இயக்கமும் எந்தவொரு அறிக்கையும் விடேல்லயாம். ஆனா முதல் முதல் படத்த ஒரு
தியேட்டரில போடேக்க சனம் வரேல்லையாம். சனத்தை வரவழைக்கத் தான் உப்பிடியொரு
கதையைக் கிளம்பினவை எண்டு அவங்கள் சொல்லுறாங்கள்.
|
வன்னியப்பு: யார் கிளம்பினது?
|
சி.மாஸ்டர்: பிரசன்னவும் அவற்ற
சிநேகிதருமாம். |
வன்னியப்பு: யார்
சிநேகிதர்?
|
சி.மாஸ்டர்: வேற யார்? தமிழ்த்
தேசியத்திற்கு எதிரான ஆட்களாம். |
கிளாக்கர்: ஆடுகள கவிஞரும் எதிரியே?
|
சி.மாஸ்டர்: அவரோட நிண்ட ஒரு
பொம்புளைப்புள்ளை வெள்ளை வான் கதையள் எண்டு ஒரு படம் எடுத்தவ. அவருக்கு தமிழ்
நாட்டில எதிரிகள் கூட. |
வன்னியப்பு:
அந்தப் பிள்ளை இஞ்சை எல்லாம் வந்துபோனதுதானே? |
சி.மாஸ்டர்:
ஓம்... தமிழ்த் தேசியர்கள் சொல்லுறாங்கள் அவ தேசியத்திற்கு எதிரானவராம். அந்தப்
பிள்ளையையும் கவிஞரையும் ஒண்டாக் கண்டோண்ண எதிர்தரப்புக்கு புண்ணில புளி
பட்டதுபோல வந்திட்டு. தமிழ்த் தேசியர்கள் படத்தை எதிர்க்கிறாங்கள் எண்டு அந்தப்
பிள்ளை இணையத்தில எழுதினவவாம். |
கிளாக்கர்:
இதில பிரச்சினை, பிரசன்ன இல்லை... படமும் இல்லை... படத்தோட நிண்ட ஆள்கள்தான்.
அப்பிடியே? |
சி.மாஸ்டர்:
அப்பிடி முழுக்கச் சொல்லேலாது. படமும் அவங்களுக்குப் பிடிக்கேல்ல. படத்தில
ரெண்டு இடத்தில பயங்கரவாதிகள் எண்டு வருதாம். படத்தின்ர முடிவும் ஒரு தமிழ்
பெட்டை தற்கொலை செய்யிறதா இருக்காம். அதோட படத்தைப் போட்டபிறகு எழும்பி கேள்வி
கேட்டவை, கனக்க அரசியல் கேள்வியள் கேட்டவையாம். அதுக்கு பிரசன்ன மழுப்பலாத்தான்
பதில் சொன்னவராம். |
கிளாக்கர்:
அவன் என்ன பதில் சொல்லுறான் எண்டதை விடவும்.. அவன்ர படம் என்ன சொல்லுது
எண்டதுதான் இஞ்ச முக்கியம். |
சி.மாஸ்டர்:
அத விளங்கிறதுக்கு ஒரு கலைத்தரம் வேணும். எங்கட தமிழ் மசாலாவுக்கு
பழக்கப்பட்டவையால அதை விளங்கிறது கஷ்டம். |
வன்னியப்பு:
அப்ப விளங்காமலே அடிபடுறாங்கள்? |
சி.மாஸ்டர்:
இல்லை. ஒரு கலைஞரிட்ட என்னத்தை எதிர்பார்க்கலாம்.. ஒரு அரசியல்வாதியிட்ட
என்னத்தை எதிர்பார்க்கலாம் எண்டதில எங்கட ஆட்களிட்ட தெளிவு இல்லை.
அரசியல்வாதியிட்ட கேட்கிற கேள்வியளை ஒரு கலைஞரிட்ட கேட்கலாமே? |
வன்னியப்பு:
படத்தில் அரசியல் இருந்தா அந்த அரசியலக் கேள்வி கேட்கலாம் தானே? |
சி.மாஸ்டர்:
கேட்கலாம் தான். ஆனா அதுக்கு முதல் அப்படிப்பட்ட படங்கள விளங்கிறதுக்கும் ஒரு
பயிற்சி வேணும். மசாலா ரசனையோட போய் அதைப் பார்க்கேலாது. |
வன்னியப்பு:
எனக்கொரு கேள்வி? நீங்க சொல்லுற மாதிரி அவர் உலகத் தரமானவர் எண்டா சமாதான
காலத்தில புலியள் ஏன் அவர வைச்சுப் படம் எடுக்கேல்ல? |
கிளாக்கர்:
சரியாக் கேட்டீங்கள்... நானும் நினைச்சனான். மகேந்திரன வைச்சு வகுப்புக்கள்
எடுத்தவை.. பாரதிராஜாவை கொண்டு வந்து படத் தொடக்கவிழாச் செய்தவை. ஆனா
மகேந்திரனின்ர மகன் ஜான்னை வைச்சுத்தான் படம் எடுத்தவை. ஏன் அப்படி? |
சி.மாஸ்டர்:
அவையளுக்கு உதிரிப்பூக்களைப் போல ஒரு படம் எடுக்கிறதைவிடவும் சச்சினைப் போல ஒரு
படம் தான் தேவைப்பட்டதாக்கும்? அதுவொரு இயக்கம். அதுக்கு கனக்கச் சனத்திட்ட போற
படம் தான் வேணும். கொஞ்சம் இலக்கிய மொட்டையள் இருந்து பார்த்து வாயுறிச்சிக்
கதைக்கிற படங்களையெல்லாம் அப்பிடிப்பட்ட இயக்கங்கள் காசு கொடுத்து எடுக்குமோ? |
கிளாக்கர்:
அப்ப அவைக்கு பிரச்சாரம்தான் முக்கியம் எண்டிறியள்? |
சி.மாஸ்டர்:
அப்பிடித்தானே நிலைமை இருந்தது. பிரசன்ன மாதிரி ஆட்களை வைச்சு படம் எடுக்கிறதில
அவையளும் ஈடுபாடு காட்டேல்ல. |
வன்னியப்பு:
சில நேரம் அவங்கள் பிரசன்னவை நம்பாமல் இருந்திருக்கலாம் தானே? |
சி.
மாஸ்டர்: ஏன்? ஆணிவேர் எடுத்த ஜானோடையும் கடைசி நேரத்தில ஏதோ பிடுங்குப்பாடாம்.
அதுதான் பிறகு எல்லாளன் எடுக்கேக்க வேற யாரையோ வைச்சுத்தானே எடுத்தவை. |
வன்னியப்பு:
இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறிங்கள்? இது ரசனைப் பிரச்சினையோ கருத்துப்
பிரச்சினையோ? |
சி.மாஸ்டர்:
ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லாரையும் எங்கட வழிக்கு வாங்கே எண்டு கேட்கிறது
தான் பிரச்சினை. |
வன்னியப்பு:
விளங்கேல்ல? |
சி.மாஸ்டர்:
சிங்களவனும் தமிழ்த் தேசியம் கதைக்கோணும், வெள்ளைக் காரனும் தமிழ்த் தேசியம்
கதைக்கோணும் எண்டு எப்பிடி எதிர்பார்க்கிறது? சிங்களவன் இனவாதம் கதைக்காமல்
விட்டாலே போதும். அப்பிடிப்பட்டவனை எப்பிடி இன்னுமின்னும் எங்கட வழிக்கு கொண்டு
வரலாம் எண்டுதான் பார்க்கோணும். அவனை கறுப்புப் படம் எடுக்கிறவன் எண்டு சொல்லுற
இனத் துவேசியளின்ர பக்கம் தள்ளிவிடக்கூடாது. |
கிளாக்கர்:
எங்கட ஆட்கள் காலத்துக்குக் காலம் இதைத்தானே செய்யினம். எதிரிகளை உற்பத்தி
செய்யிறது.. இல்லாட்டி அரை நண்பனை முழு எதிரியாக்கிறது... |
வன்னியப்பு:
அப்ப பிழை எங்களிலயே? |
சி.மாஸ்டர்:
வேற ஆரில? பிறத்தி இனங்களில இருந்து தன்ர இனத்து துவேசியளை எதிர்த்துக் கொண்டு
எங்களை நோக்கி வாறவனை அணைக்கிறது சரியோ.. கேள்வி கேட்டு அவமானப்படுத்தி
துரத்துறது சரியோ? |
வன்னியப்பு:
ஆர் துரத்தினது? எல்லாரும் துரத்தேல்லத்தானே? |
கிளாக்கர்:
உண்மைதான். உண்மையா போராட்டத்தோட நிண்டவனும் அதில தன்ர சொத்துச் சுகங்களை
இழந்தவனும் சண்டைக்கிள்ள கடைசி மட்டும் நிண்டு வந்தவையில கனபேரும் பிரசன்னவை
ஆதரிக்கினம். எதிர்க்கிறவையில கனபேர் சண்டைக்கு வெளியில நிண்டவைதான். |
வன்னியப்பு:
மெய்யே? |
கிளாக்கர்:
அதுதான் உண்மை. சண்டைக்கு வெளியில நிண்டவை கனபேர் மே17க்கு பிறகு தீவிரவாதிகளா
மாறிட்டினம். தங்கட தேசியப்பற்றை நிரூபிக்க எல்லாத்திலயும் கருத்துச் சொல்லினம்.
எல்லாத்திலயும் கேள்வி கேட்கினம். உப்பிடிப்பட்ட விசயங்களில கடும் தீவிரமாக்
கதைச்சு தங்கட வீரத்தை நிரூபிக்கப் பாக்கினம். |
வன்னியப்பு:
ஏலுமெண்டா உப்பிடியொரு படத்தை தங்கட அரசியலை முன்வைச்சு எடுத்துக் காட்டலாம்
தானே? |
சி.மாஸ்டர்:
நாங்கள் ஒண்டும் செய்யமாட்டாம். ஆனாச் செய்யிறவனில பிழை பிடிப்பம். செய்யிறவனில
பிழை பிடிக்கிறதுதான் எங்கட செய்முறை. |
வன்னியப்பு:
அப்ப நாங்க திருந்த மாட்டம் எண்டிறியள். |
சி.மாஸ்டர்:
திருந்தவே மாட்டம்.
நன்றி: பொங்குதமிழ்
|