மறப்போமா தமிழின அழிப்பு நாளை! -தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி !!!

ஈழத் தமிழர்களின் உண்மையான பாதுகாவலர்களாகத் திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயூதங்கள் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தாயகத்தில் வாழும் எமது உறவுகள் வரலாற்றில் என்றுமே சந்தித்திராத ஒரு மென்தீவிர இனவழிப்புக்குள் சிக்குண்டு, அழிவுகளையும் சொல்லொணாத் துன்பத்தையும் அனுபவித்து வருகிறார்கள்.

'பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் உலகத்தை ஏமாற்றி, சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தோடு சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பை செவ்வனே நிறைவேற்றி வருகிறது. அவ்வாறு உலக நாடுகளின் ஆதரவை ஒன்றுதிரட்டி மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டமே முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஆகும்.

'மே - 18 முள்ளிவாய்க்கால் என்பது தமிழின வரலாற்றிலே மிகக்குறைந்த மாதங்களில், மிகக் குறுகிய நிலப்பரப்புக்குள் இறுதிப் போரின்போது தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டமாகப் படுகொலை செய்யப்பட்ட எமது அப்பாவி உறவுகளையும், இதுவரை காலமாகச் சிங்கள இனவாதத்தின் இனப்படுகொலைக்குப் பலியான எமது அப்பாவித் தமிழ் மக்களையும் நினைவுகூருவதற்கான ஒரு குறியீடு ஆகும். அந்தவகையில், இந்த நாளை உலகத் தமிழினம் கனத்த இதயத்துடன் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தி வருகிறது.

படுகொலை செய்யப்பட்ட தமது உயிருக்குயிரான சொந்தங்களுக்கு தாயகத்தில் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதைத் தடுக்கும் முகமாகத் திட்டமிட்ட வகையில் சிங்களப் பேரினவாத அரசு யாழ். பல்கலைக்கழகத்தை மூடியும் தமிழ் மக்களை அச்சுறுத்தியும் வருகின்றது. சிங்களப் பேரினவாதம் தமிழின அழிப்பு நாளை 'வெற்றி விழாவாகத் திமிருடன் கொண்டாடிவரும் அதேவேளை, மண்ணுக்காக தம்முயிர் தந்த எமது மாவீரர்களையும் இனப்படுகொலைக்குப் பலிகொள்ளப்பட்ட எமது மக்களையும் நினைவுகூர்ந்து வணக்கம் செய்வதைக் கொலை மிரட்டல்கள் விடுத்துத் தடைசெய்வதோடு, அதைப் படுகொலை செய்யப்பட்டோரின் வெற்றி விழாவாகக் கொண்டாடுமாறு கட்டாயப்படுத்துவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறௌம்.

சிங்களப் பேரினவாதம் ஆயிரமாயிரந் தடைகள் விதித்துத் தமிழர்களை அச்சுறுத்தி அடக்கியாள முற்பட்டாலும், வீரத்தோடு போரிட்டு வீரமரணமடைந்த மாவீரர்களுக்காகவும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் தாயகத்தில் வாழும் தமிழ்மக்கள் தமது இதயங்களில் கட்டிய கல்லறைகளில் நினைவேந்தி வணக்கம் செலுத்துவதை எந்தவொரு சக்தியாலும் என்றுமே அழித்துவிட முடியாது. அவர்கள் தமிழர்களுடைய இதயங்களில் சுதந்திர தாகத்தின் உயிர்துடிப்பாக என்றும் நிலைத்திருப்பார்கள்.

எந்தவொரு அரசும் தமது மக்கள் இறந்த நாளை வெற்றி நாளாகக் கொண்டாடி மகிழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. ஆனால், சிங்களப் பேரினவாதம் தமிழின அழிப்பு நாளைத் தமது வெற்றி நாளாகக் கொண்டாடுவதன் ஊடாக இலங்கைத் தீவில் சிங்கள தேசம், தமிழர் தேசம் என இரு நாடுகள் இருப்பதை சிறிலங்கா அரசு தாமே ஒப்புக்கொள்வதாகக் கருதமுடியும் என்பதைத் தமிழ் இளையோர் அமைப்பு இந்த அறிக்கை வாயிலாகச் சர்வதேச சமூகத்துக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

எமது உயிரினும் மேலான தமிழீழ மண்ணை மீட்டெடுக்கும் போரில் தம்முயிர் தந்த மாவீரர்களுக்கும் இனப்படுகொலைக்குப் பலியான எம் தமிழ் உறவுகளுக்கும் தமிழ் இளையோர் அமைப்பு எமது புரட்சிகரமான வீரவணக்கத்தைத் தெரிவிப்பதோடு, அவர்கள் எந்தத் தமிழீழ தனியரசு என்ற இலட்சியத்திற்காகத் தமது உயிரைத் தந்தார்களோ, அந்த இலட்சியம் நிறைவேறும் வரை தமிழ் இளையோர் அமைப்பு தொடர்ந்து உறுதியோடும் நெஞ்சுரத்தோடும் போராடுமென இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்கின்றது.


'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!


இவ்வண்ணம்
தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி