குற்றப்புலனாய்வுப் பிரிவு எனக் கூறி மீண்டும் கொழும்பில் மோசடிக் கும்பல் --தமிழ் மக்களே எச்சரிக்கை !!!

கொழும்பு நகரில் அண்மைய காலமாக தமிழ் மக்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வழிப்பறி நடவடிக்கைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. குறித்த சில இனம்தெரியாத நபர்களால் தாம் குற்றப்புலனாய்வு பிரிவினர் எனக் கூறியும் அடையாள அட்டையை காட்டுமாறு மிரட்டியும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன.
                                                                                                                                                   (நிழற்படம்-வீரகேசரி)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்கிஸை பகுதியில் இரு தமிழ் ஆசிரியைகள் அணிந்திருந்த ஆபரணங்களை அபகரிக்க முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை.
 
இச்சம்பவம் குறித்து ஆசிரியை ஒருவர் தகவல் வழங்குகையில்,
 
"நான் கல்கிஸைப் பகுதி தமிழ் பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றுகின்றேன். காலை வேளையில் பிரதான பாதையை கடக்க முற்பட்ட சமயத்தில் நெடிய தோற்றத்துடன் பின்னால் ஒருவர் அழைத்தார். தான் குற்றப்புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என்றும், விசாரணையின் பொருட்டு எனது அடையாள அட்டையை காண்பிக்குமாறும் அதிகாரத் தொனியில் கேட்டார். உடனே நானும் அடையாள அட்டையை காட்டினேன். இமைக்கும் நொடியில் அவருடன் இணைந்துக் கொண்ட இன்னொருவர் எனது கையிலிருந்த மோதிரத்தை கழட்டுமாறும் மிரட்டினார். அதிர்ஷ்ட வசமாக பின்னால் வந்த பொலிஸ் வண்டியை கண்டதும் இருவரும் விரைந்து சென்று விட்டார்கள். இவ்வாறானதொரு சம்பவம் என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியை ஒருவருக்கும் இடம்பெற்றுள்ளது" எனக் கூறினார்.
 
மேற்படி சம்பவம் குறித்து இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு ஆசிரியை கருத்து தெரிவிக்கையில்,
 
“நான் சந்தைக்கு சென்றிருந்தேன். அறிமுகமற்ற நபரொருவர் என்னருகில் வந்து எனது அடையாள அட்டையை காட்டுமாறு கூறினார். அவருடன் இன்னுமொருவரும் இருந்தார். தங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவு எனக் கூறினார்கள். உடனே நானும் எனது அடையாள அட்டையை காட்டினேன். மேலும் இப்பகுதியிலுள்ள பாடசாலையில் பத்து வருடங்களாக கடமையாற்றுகின்றேன் எனவும் கூறினேன். சிறிது நேரம் பார்த்துவிட்டு யோசித்தவர்கள் கண்களால் ஏதோ சைகை செய்துவிட்டு என்னை போக அனுமதித்தார்கள். அப்போழுது நான் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை. எனினும் மேற்படி சம்பவம் என்னுடன் கடமையாற்றும் சக ஆசிரியைக்கும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.