அன்புள்ள ஜெயக்குமாரி அக்காவுக்கு, இலண்டன்லிருந்து குருபரன் எழுதுவது...

அக்கா உங்களை நலமாக இருக்கிறீர்களா எனக் கேட்கக்கூடிய இடத்தில் நீங்கள் இருக்கவில்லை. அது உங்கள் விதியா அல்லது உங்கள் வினையின் விளைவா என்பது ஜெனிவாவில் விவாதிக்க வேண்டிய விடையம் அல்ல. ஆனால்  நாங்கள் இங்கு மிக நலமாக இருக்கிறோம். எங்கள் நலத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய  இடத்தில் இப்போ நாங்கள் வாழவும் இல்லை. அதற்கான எந்தச் செயலிலும் நாங்கள் ஈடுபடுவதும் இல்லை என்பதை உங்களுக்குச் சொல்வதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை.

அக்கா கடந்த சில நாட்களாக நாங்கள் மிகுந்த சந்தோசமாக உள்ளோம். ஏனெனில் உங்களைப் போன்ற  அக்காமார், அம்மாமார், அண்ணன்மார், தங்கைமார் என இன்னோரன்ன அப்பாவிகளின் தியாகங்களுக்கு சிறிதளவேனும் மதிப்பளிக்கப்படக் கூடிய வகையில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா மனித உரிமைத் தீர்மானம் குறித்துப் பூரித்துப் போய் இருக்கிறோம்.

அக்கா நான் ஒரு ஊடகவியலாளன் என்பது உங்களுக்குத் தெரியும்தானே. ஜெனிவாவில் தீர்மான வாக்கெடுப்பு இடம்பெற்ற போது அதனை நானும் என் போன்ற ஊடகவியலாளர்களும், இணைய வானொலிகளிலும்;, இணையத் தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒலி ஒளி பரப்பினோம். உலகத் தலைவர்களது கருத்துக்களைப் பக்கம் பக்கமாக எங்களது ஊடகங்களில் வெளியிட்டோம். எங்கள் தேசத்தின் மீட்பர்கள் செய்த அறிக்கை போரை மட்டுமா அரசியற் தலைவர்களின் சாதனைகளையும் பட்டியலிட்டோம். அவர்கள் ஜெனிவாவுக்கு விமானத்தில் பறந்து சென்று, அங்கு வீரவசனங்களைப் பேசியது முதல் உலகத் தலைவர்களைக் கட்டி அணைத்துக் கைலாகு கொடுத்து, விருந்துகளிலும் தேனீர் உபசாரங்களிலும் கலந்து கொண்டது வரை எழுதித்தள்ளியதுடன் அவர்களின் வீரம் சொட்டும் திருவுருவப் படங்களையும் காணொளிகளாகவும் ஒளிப்படங்களாகவும் வெளியிட்டோம்.

அக்கா இதில் என்ன சந்தோசம் என்றால் எங்கள் இணையத்தளங்களின் வாசகர்களின் எண்ணிக்கை இக்காலத்தில் திடீர் என்று அதிகரித்ததுதான். உங்களுக்கு தெரியுமோ தெரியாது இப்படியான நாட்கள் இணையத்தளக்காரர்களுக்கும் ஊடக்காரர்களுக்கும் நல்லூர்த் திருவிழாநாட்கள். சுருக்கமாகச் சொன்னால் ஜெனிவாத் திருவிழா  என்பது ஒரு விதத்தில் நல்லூர்த் திருவிழா.

கொடுமையான போருக்குப் பிள்ளைகளைப் பறிகொடுத்து மிஞ்சியிருந்த ஒரு பாலகியையும் சிறுவர் இல்லத்தில் தனிக்க விட்டுத் தனித்திருக்கும் அக்கா! உங்களால் நிறையப் பயன்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. நீங்கள் செய்த போராட்டம், ஓரளவுக்கு உலகத்தை எங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

இக்கணத்தில் புற்றீசல் போலப் புறப்பட்டிருக்கும் பல அரசியல் ஆய்வாளர்கள் (உண்மையான ஆய்வாளர்களை இங்கு குறிப்பிடவில்லை) ஜெனீவாத் தீர்மானத்தைத் தூக்கி வைத்து அக்கு வேறு ஆணிவேறாக அலசித்  தூள் கிளப்புகிறார்கள். இபொழுது நடப்பவற்றை பத்து வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டேன் ஒன்று ஒருவர் சொல்ல மற்றவர் இது பற்றிப் பதினைந்து வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டேனே! என்று கடுப்பாகிறார்.

நியூசிலாந்நில் இருக்கும் என் நண்பர் வரதராஜன்: ' குருபரன் அனேகமாக எல்லாவற்றிற்கும் ஒன்றியங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ் ஆய்வாளர்கள் ஒன்றியம் என்ற ஒன்று மட்டும் இல்லை அதனைத் தொடங்குவமோ? எங்களுக்குள் ஆய்வாளர்கள் கூடிவிட்டனர். எல்லாரையும் சேர்த்து ஆய்வுகளை ஒருமுகப்படுத்தச் சொல்லுவம்'  என்று அங்கதமாகக் கேட்டார்.

புலம்பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்த அமைப்புக்கள் ஜெனிவாவில் முகாமிட்டு இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவருவதற்கு தாமே அதிகமாக வேலைகளைச் செய்தோம் என மார்தட்டுகிறார்கள்.

இனிக் கொஞ்ச நாட்களுக்கு  நாங்கள் (ஊடகவியலாளர்கள்) ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும். நடிகைகளின் படங்களையும்  விடுப்புக்களையும் பாலியல் ரசம் சொட்டும் கதைகளையும்  வைத்துக்கொண்டுதான் இனிக் கொஞ்ச நாளைக்கு நாங்கள் காலத்தைத் தள்ளவேண்டும். இடைக்கிடை புலிகளின் தலைவர் பிரபாகரன், புலி, அதிர்ச்சி பரபரப்பு, திடுக்கிடும் போன்ற சொற்கள் வரக்கூடிய வகையில் சிறு செய்திகளையும் வெளியிட்டுச் சமாளித்துக் கொள்ளலாம்.

எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை மாகாண சபைத் திருவிழா முடிந்துவிட்டது. ஜெனிவாத் திருவிழா முடிந்து விட்டது.  இனி என்ன திருவிழா? ஊழல்த் திருவிழாக்கள் களைகட்டியிருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. இது இன்று நேற்றுத் தொடங்கியதல்லவே? ஆனால் இது முடியாத திருவிழா....  

ஒ! மறந்து போனேன் பாராளுமன்றத்தேர்தல். அதற்கான  தயாரிப்புக்களைத் தொடங்க வேண்டும். கவலை என்னவென்றால்  மகிந்த அரசாங்கம் ஒன்பது ஆசனங்கள் பெறக்கூடிய யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தை ஆறு ஆசனங்களாக மாற்றி விட்டது. நன்றாக கதிரைச் சுகத்தை  அனுபவிக்கக்கூடிய மூன்று ஆசனங்களை நாங்கள் இழந்து விட்டோமே கடவுளே!!

ஏற்கனெவே காணி வீடு வளவு காசு என்று சீரும் சிறப்புமாக இருக்கிற பலருக்கு அரசியலுக்குள்ளும்  பணப்பசியில் காசு சேர்க்க எப்படி மனம் வருகிறதென்பது பலருக்குப் புரிவதில்லை. யாரால்தான் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

இவை மட்டும் என்றே நினைக்கிறியல் முக்கிய தமிழ் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில வேலை செய்கிற சிலபேர், அரசாங்க அதிகாரிகள் சிலபேர், கணவன்மாரை சிறைகளிலும், காணாமல் போதலிலும் பறிகொடுத்து, உதவிகளுக்கு போனால் பாலியல் லஞ்சமும் கேட்கினமாம் வேலியே பயிரை மேஞ்சால்...

சரி விடுங்கள் நீங்கள் இருக்கிற நிலையில் உங்களுக்கு இந்த ஆராய்ச்சி எதற்கு? தமிழர்களை ஒடுக்கு முறையில் இருந்து மீட்கத்துடிக்கும் கட்சிகளுக்குள்ளே இப்பவே  குத்து வெட்டு தொடங்கி விட்டது. யார் யாருக்கு ஆசனம் கிடைக்கும்; யாருக்குக்கிடைக்காது என்ற பதட்டத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஆளுக்காள் குழி பறிப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை.

தனக்கான ஒரு விடுதலைப் போராட்டத்தை  நிகழ்த்திய, ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட அனைத்தியக்கப் போராளிகளின் தியாகமும், லட்சக்கணக்காண மக்களின் தியாகமும் நிகழ்ந்த ஒரு சமூகத்திற்குள் ஊழலும் அரசியற் குத்துவேட்டுகளும், வேலியே பயிரை மேய்வதும் நிகழவேண்டும். இல்லை எனில் எமது விடுதலைப் போராட்டத்தின் மதிப்பு உலகத்திற்குத் தெரியாது.

புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கிற நாடுகளில்  அமைப்புகள் இப்பவே அடுத்த ஜெனீவாக்கூட்டத்திற்கு தம்மைத் தயார் செய்யத் தொடங்கி விட்டார்கள். முதற்கட்டமாக திரிஷாவை அழைத்து திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  போராட்டம் நடத்தக் காசு வேண்டும். சந்தைப்பெறுமானம் மெதுவாகச் சரிந்து கொண்டு செல்கிற நடிக நடிகைகளின் பட்டியலை தாயாரித்துத் தரும் இணையங்களும் உள்ளன.

அது சரி அக்கா  ஜெனிவாவுக்கே போனவர்களும் ஜெனீவாத் தீர்மானம் குறித்து அனல்பறக்க முழங்கியவர்களும் இலங்கை வந்தால் அரசாங்கம் அவர்களைப் பிடித்து உங்களோடு பூசாவுக்குள் போட்டு விடுமே என்று நீங்கள் கலங்குவது புரிகிறது. போகும் போதே பாதுகாப்பாகத் திரும்பி வருவதற்கான  எற்பாடுகளுடன் செல்பவர்கள் கலங்குவதில்லை. அப்படி இல்லாத சிலர் கலங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எந்தச் சூதுவாதும் தெரியாத உங்களால் உங்களுக்கென என்ன பாதுகாப்பை செய்திருக்க முடியும்?

காணாமற்போன எனது பிள்ளையைத் தா என்று உண்மையான தாய்க்குரிய ஆக்ரோசத்தை வெளிப்படுத்தியது உங்கள் குற்றம்!

அரசியல்வாதிகளின்  உணர்ச்சிகரமான பேச்சில மயங்கி வீதியில் இறங்கிப் போராடத் துணிந்தது உங்கள் குற்றம்!

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள்  அரசியலில் பழங்கள் தின்று, அபகரித்த அயலவன் காணியில் கொட்டைகளைப் போட்டு மரங்கள் வளர்க்கும் ஐயாமார் பலர் இந்தியா தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது என்று இப்பொழுதுதான் சொல்கிறார்கள்...

குழந்தை ம சண்முகலிங்கம் அவர்கள் மண்சுமந்த மேனியர் என்றொரு நாடகத்தை 1980களில்  எழுதியிருந்தார். அதில் ஒரு வசனம் வரும்: ' கிழக்கு வெளுக்கும் என்று வடக்கைப் பார்த்துப் பு..கைச் சொறிஞ்சுகொண்டு இருக்கினம்'.  

ஜெயக்குமாரி அக்கா  எங்களுடைய அரசியல்வாதிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் வடக்கையும் மேற்கையும் பார்த்துத் தங்களின் பு..கையும் மற்றவர்களின் பு..கையும் சொறிவதை விட்டு உங்களைப் போன்ற  அக்காமார், அம்மாமார், அப்பாமார், அண்ணண்மார், தம்பிமார் மற்றும் இதய சுத்தியோடும் வாழும் துடிப்போடும் போராடும்  மக்களின் குரலுக்கு செவி சாய்க்க முனையக்கூடாது. அப்படிச்செவி சாய்த்து அதற்காக நியாயமான அரசியற் போராட்டங்களை நடாத்தி உங்களைப்போன்ற பயங்கரவாதிகளை விடுதலை செய்யச் செய்து மக்களின் நியாமான அரசியல் அபிலாசைகளை உலகின் முன் வைக்கக் கூடிய போராட்டங்களை நடத்தி விட்டால் எதிர்காலத் திருவிழாக்களில் முன் வைப்பதற்குக் கோசங்கள்  எதுவுமிருக்காதே!

அப்பாவி அரசியற் கைதிகளாலும் இன்னும் அறியப்படாத காணாமல் போனவர்களாலும் நிரம்பியிருக்கும் இலங்கைச் சிறைகளில் ஒன்றில் இருக்கும் உங்களுக்கு இந்தக்கடிதம் வாசிக்கக் கிடைக்காது. அதனாலென்ன நீங்கள் இதனை வாசிக்க வேண்டும் என்பது முக்கியமல்ல் நீங்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.
அன்புடன்
நடராஜா குருபரன்
(ஊடகவியலாளன்)
இலண்டன்.

                                                  குளோபல் தமிழ் செய்தி வலையமைப்பு
 http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105014/language/ta-IN/article.aspx