புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதன் ஊடாக வடக்கு துருப்பினர் நிலைநிறுத்தம் நியாயமானது என்பது நிரூபணம் !!!
கோபி உள்ளிட்ட மூன்று தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் கொல்லப்பட்டதன் ஊடாக வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் நிலையாயமானது என்பது நிரூபணமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க, கண்டி அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கோபி உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களும், ஒரு இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரும் கொல்லப்பட்டனர்.
வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், நெடுங்கேணி சம்பவம் இதற்கான பதிலை அளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குலக நாடுகள் இராணுவ பிரசன்னத்தை குறைக்குமாறு கோரி வந்த போதிலும், இறைமையுடைய நாடு என்ற ரீதியில் இலங்கை அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அரசாங்கத்தின் இந்த தீர்மானம் நியாயமானது என்பதனை சர்வதேச சமூகத்திற்கு இந்த சம்பவம் உணர்த்தியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அதனை அமுல்படுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உள்ளக பொறிமுறைமையின் ஓன்றின் மூலம் நிரந்தர நல்;லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.