யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளின் கரவெட்டிப் பகுதிச் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன் மீது தாக்குதல்-15.04.2014 !!!

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரோடு உரையாடலை ஏற்படுத்தி அவர்தான் செல்வதீபன் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளாகி விழுந்த பின் அவர் எழுந்து அருகிலிருந்த பற்றைக்குள் ஓட முயன்றபொழுது மீண்டும் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தினக்குரல் மற்றும் ‘வீரகேசரி’ பத்திரிகைகளின் கரவெட்டிப் பகுதிச் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன் இன்றிரவு வழிமறித்துத் தாக்கப்பட்டுள்ளார். நெல்லியடிப் பகுதியிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் அவர் சென்றுகொண்டிருந்தபோது புறாப்பொறுக்கி சந்தியில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கடைசி பஸ் வண்டியின் சாரதி வீதியோரத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்திருப்பதைக் கண்டு பஸ்ஸை நிறுத்திய போது தாக்கியவர்கள் தப்பியோடியுள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை செய்ய முயன்றுள்ளனர். எனினும், காயமடைந்தவரை உடனயாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவேண்டும் எனப் பொதுமக்கள் கூறி அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது அவர் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு சாட்சியங்களைப் பதிவு செய்த பொழுது, காணாமல் போன தனது சகோதரர் தொடர்பாக இவரும் அங்கும் சாட்சியம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாகவே சந்தேகத்திற்குரிய நபர்களால் தான் பின்தொடரப்படுவதாக தனது பத்திரிகை அலுவலகங்களில் அவர் தெரிவித்திருக்கிறார். அத்தோடு, நெல்லியடி பொலிஸ் நிலையத்திலிருக்கும் தனக்குத் தெரிந்த பொலிஸார் சிலரிடம் இது தொடர்பாக அவர் கூறியிருந்திருக்கிறார். Repodr-Jaffna Repodr-Jaffna01 Repodr-Jaffna02 Repodr-Jaffna03