சர்வதேச விசாரணையும் அமெரிக்காவின் ஏமாற்றுத்தனமும் !!!

2009ல் இனப்படுகொலை அரங்கேறி முடிந்த சில நாட்களில், மே 26, 2009 அன்று ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில், அதனுடைய தலைவர் நவிப்பிள்ளை இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். அதனை தொடர்ந்து ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில் ஜூன் மாதம் தொடங்கி பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன. அப்பொழுது பேசிய பல்வேறு ஐ.நா. அலுவலர்களும் பல விஷயங்களில் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டங்களில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களாக இருந்தவற்றுள் சில.
1. இலங்கையின் கடந்தகால உள்நாட்டு விசாரணைச் செயல்பாடுகள் இலங்கை அரசை உண்மையான பொறுப்புதாரியாக அடையாளம் காட்டவில்லை.
2. இலங்கையில் ஐ.நா. செயல்படுவதற்கான போதிய அரசியல் வெளி அளிக்கப்படவில்லை.
3. நீதி மற்றும் விசாரணை தொடர்பான விஷயங்களில் ஐ.நா.வின் திட்டமிடலுக்கும், வழிகாட்டலுக்கும் தேவையான அறிக்கையினை மனித உரிமை கமிஷன் தயாரிக்க வேண்டும்.
ஐ.நா.வின் சட்ட விதி 99ன் படி, இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு (பான்-கி-மூன்) இருக்கின்றது என்று சட்டத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். (சமீபத்தில் சிரியாவில் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட்ட பான்-கி-மூன் விதி 99 ன் அடிப்படையில்தான் செயலாற்றினார். இந்த விதியின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அந்த நடவடிக்கை நடந்தேறும்.)
ஜூன் 23, 2009, அன்று முடிவுற்ற அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நவி பிள்ளை தலைமையிலான மனித உரிமை கவுன்சில், இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியது. ஜூலை 30, 2009 அன்று ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில் கூடிய கூட்டத்தில் பான்-கி-மூன் சர்வதேச விசாரணையை ஒட்டுமொத்தமாக நிராகரித்தார். உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்ப ஏற்படுத்துவதற்கு தேவையான அரசியல் வெளியை இலங்கை அரசுக்கு நாம் வழங்க வேண்டும் என்று கூறினார். அதாவது குற்றவாளி தன்னைத்தானே விசாரித்து தனக்குத்தானே தண்டனை அளித்துக்கொள்ளும் ஒரு புதுமையான திட்டத்தை முன்வைத்தார். (சர்வதேச விசாரணையை முதலில் தடுத்து நிறுத்திய பான்-கி-மூனுக்கு இந்தியத் தொடர்பு உண்டு. பான்-கி-மூனின் மருமகன் சித்தார்த் சாட்டர்ஜி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொல்வதற்காக அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையின் பிரிவில் இருந்த ஒரு ராணுவ சிப்பாய்.)
அதற்கு பிறகு ஐ.நா.வில் மூவர் குழு என்னும் பெயரில் நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையினை 2011 மார்ச் இறுதியில் வழங்கியது. அந்த அறிக்கையின் முதல் பரிந்துரையாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியது. மேலும் இலங்கை அமைத்த LLRC என்னும் அமைப்பும் நேர்மையானது இல்லை என்று தெரிவித்தது. இந்த அறிக்கை வெளியான பின்பு ஐ.நா.வின் செயல்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக தொராயா ஒபைத் என்பவரை நியமித்தார்கள். ஆனால், அவர் அந்த ஆண்டு இறுதி வரை தனது வேலையைத் தொடங்கவில்லை. பிறகு அந்தப் பணி, சார்லஸ் பெட்ரி என்பவருக்கு மாற்றப்படும் சூழல் உருவாகியது. அப்பொழுதுதான் 2012 மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை முன்வைக்கின்றது,.
ஐ.நா.வின் நடைமுறைகளின் படி அதனுடைய மட்டத்தில் சர்வதேச விசாரணையைப் பற்றிய விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தச் சூழலில் அமெரிக்கா LLRC அடிப்படையிலான உள்நாட்டு விசாரணைக் கோரி ஒரு தீர்மானத்தினை முன்வைக்கின்றது. அதாவது, உச்சநீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதைப் பற்றி தன்னிச்சையாக உச்சநீதிமன்றமே முன்வந்து செயலாற்றும்போது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டாம்; கட்டப்பஞ்சாயத்து செய்து இதனை முடித்துக் கொள்ளலாம் என்று கூறுவதைப் போல்தான் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமைகின்றது.இது போன்ற நிகழ்வு என்பது, குற்றவாளியை பாதுகாப்பதற்கான ஒரு நகர்வே அன்றி குற்றவாளியை தண்டிப்பதற்கோ அல்லது பாதிக்கப்பட்டவனுக்கு நீதி, நிவாரணம் வழங்குவதற்கோ மேற்கொள்ளப்பட்ட நகர்வு அல்ல.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானங்கள், ஐ.நா.வே முன்வந்து ஒரு சர்வதேச விசாரணையை நடத்திவிடக்கூடாது என்பதற்காக, உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தி முன்வைக்கப்படுவதாகவே இருக்கின்றது. இப்படிப்பட்ட தவறான உள்நோக்கங்களைக் கொண்ட அமெரிக்கா, இந்த ஆண்டும் ஒரு தீர்மானத்தினை முன்வைக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் வரைவு நேற்று வெளியானது. அதற்கு முன்னதாக, சில வாரங்களுக்கு முன்னர், ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் உயர் ஆணையாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மனித உரிமை மன்றத்திற்கு சர்வதேச விசாரணைக்கான பரிந்துரையினை வழங்கியுள்ளார். இந்த அறிக்கை மார்ச் 25 ம் தேதி அன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த பரிந்துரையும் கூட தமிழர்களுக்கான முழுமையான தீர்வினை வழங்காவிட்டாலும், இந்த அறிக்கையினை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வேலையினைத்தான் அமெரிக்காவின் இந்த ஆண்டிற்கான தீர்மானம் செய்கின்றது. இலங்கைத்தீவு விவகாரத்தில் சிறு விஷயம்கூட நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே இந்தத் தீர்மானம் முன்வைக்கப்படுகின்றது. மீண்டும் சர்வதேச விசாரணைக்கான குரல் எழும்பியவுடனே, உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தி ஒரு தீர்மானம் முன்வைக்கப்படுகின்றது.
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் அமெரிக்கா இது போன்ற வெற்றுத் தீர்மானங்களை முன்வைக்கும்? எல்லாம் வரும் ஆகஸ்ட் 31 வரைதான். அன்றுடன் நவி பிள்ளை ஓய்வு பெறுகின்றார். அதனால், அதற்கு பின்பு அந்தப் பதவிக்கு பான்-கி-மூனை போன்ற அமெரிக்காவின் கைப்பாவை நியமிக்கப்பட்டு, ஈழ விவகாரம் சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக ஊற்றி மூடப்படும்.

உமர்
மே 17 இயக்கம்.