இலங்கை அரசாங்கம் வன்னியினில் பெண்களை அச்சுறுத்தியும் மிரட்டியுமே இராணுவத்திற்கு இணைக்கின்றது - சி.சிறீதரன் !!!

இலங்கை அரசாங்கம்  வன்னியினில் பெண்களை அச்சுறுத்தியும் மிரட்டியுமே இராணுவத்திற்கு  இணைக்கின்றது. ஆனால் வெளியுலகிற்கு தமிழ் யுவதிகள் தாமாக விரும்பி வந்து இணைவது போன்றதொரு பிம்பத்தினை காட்டிவருகின்றது. இதிலுள்ள சூழ்ச்சியிலிருந்து எமது பெண்கள் விழிப்பாக இருந்து பலியாகாது தப்பித்துக்கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பு சாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

கிளிநொச்சியில் பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இத்தகவலை வெளியிட்டார். இடுப்பில் கைத்துப்பாக்கிகள் சகிதம் வீதிகளிலும் யுத்த முனைகளிலும் மக்களை வழிநடத்தியவர்கள் எங்கள் பெண்கள். அவர்களை நினைவு கூரக்கூட அனுமதிக்காத இந்த அரசு மூடப்பட்டுள்ள எந்தவொரு தொழிற்சாலையினையும் திறக்க தயாராகவில்லை. அதனூடாக தமிழர்கள் வேலை வாய்ப்பினை பெற்றுவிடுவார்கள் முன்னுக்கு வந்துவிடுவார்களென கண்டு கொள்ளாதிருக்கின்றது.

ஆனால் மறுபுறம் படையினருக்கு தமிழ் பெண்கள் தேவையாம். ஏற்கனவே படையினரால் செயற்படுத்தப்பட்டு வரும் பண்ணைகளிலுள்ள எமது முன்னாள் பெண் போராளிகளிற்கு நடப்பது என்னவென்பது அனைவரிற்கும் தெரியும். இத்தகைய சூழலில் ஆசைவார்த்தை காட்டும் அவர்களது நிகழ்ச்சி நிரலிற்கு பலியாகி எமது சமூகத்திற்கு அவப்பெயர் ஏற்படாதிருக்க முன்வரவேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தினில் சட்டமொழுங்கு தூள் கிளப்புவதாக அரசு கூறி வருகின்ற நிலையில் வடமராட்சியின் துன்னாலை பகுதியிலுள்ள மயானமொன்றினில் 19 வயது   யுவதியொருத்தியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மூவரை தேதடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. தென்மராட்சி வரணி இடைக்குறிஞ்சியை சேர்ந்த  மேற்படி பெண் அதேயிடத்தினைச் சேர்ந்த இளைஞனுடன் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர். இதன்போது வழியில் இவர்களை வழிமறித்த 3 பேர் குறித்த இளைஞனைத் தாக்கிவிட்டு குறித்த யுவதியினை யாக்கரை மயானத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் மூவரும் சென்றபின்னர் குறித்த இளைஞன் நெல்லியடிப் பொலிஸாரிற்கு தொலைபேசியில் தகவல் வழங்க அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் யுவதியினையும் இளைஞனையும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சனிக்கிழமை நேற்று மாற்றப்பட்டுள்ளார்.

                                                                         நன்றி:GTN News