இல்லாத புலிகளை இருப்பதாக காட்டும் அரசாங்கம்:-
கிளிநொச்சியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்: விசேட தேடுதல் நடவடிக்கை:-
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் ஒருவரை தேடி விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸ் குழுவொன்று நேற்று பிற்பகல் தர்மபுரம் பகுதி வீடொன்றிற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடக்ப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
அந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து தப்பியோடிய சந்தேக நபரை தேடி பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை இந்த துப்பாக்கிப் பிரயோகம், துரிதமான ஆயுத மீட்புக்கள், அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிரான துண்டுப்பிரசுர விநியோகங்கள் யாவும் படைப்புலனாய்வாரள்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதான தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசாங்கத்திற்கும் படையினருக்கும் நெருக்கமான முக்கியஸ்த்தர், ஜெனிழவாவில் அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில் வடக்கில் இராணுவப் பிரசன்னத்தை குறைப்பதற்கும், சிவில் நடவடிக்கைகளில் படையினரின் தலையீட்டை குறைப்பதற்கும் உத்தியோகப்பற்றற்ற பாதுகாப்பு வலையங்களாக தொடரும் பிரதேசங்களில் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியும் அழுத்தங்கள் அதிகரித்து வருவதால் வடக்கில் பயங்கரவாத நடவடிக்கைகள் இன்னும் தொடர்வதாக சர்வதேசத்திற்கு காண்பிப்பதற்கே இத்தகைய நடவடிக்கைகளை புலனாய்வாரள்கள் முடுக்கி விட்டு இருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளுக்கு புணர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட படையினருக்கு நெருக்கமான முன்நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பயன்படுத்தப் படுவதாகவும், அதன் மூலம் விடுதலைப் புலிகள் இன்னும் செயற்பாட்டில் இருப்பதான பிரமையை ஏற்படுத்த அரசாங்கம் முனைவதாகவும் குறித்த முக்கியஸ்த்தர் தெரிவித்தார்.