கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை அரச படைகள் மேற்கொண்டு வரும் அச்சுறுத்தலையும் பீதியையும் ஏற்படுத்தும் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் இயல்புவாழ்க்கையை இழந்துள்ள நிலையில் இராணுவத்தினர் சிங்கள இந்துப் புத்தாண்டு கொட்டாட்டத்திற்கு மக்களை அழைப்பு விடுத்துள்ளனர்.
மக்கள் அச்சுறுத்தல் மிகுந்த நிலையில் வாழ்ந்து வருவதை திட்டமிட்டு மறைக்கவே இவ்வாறான களியாட்டங்களை நடத்தி மக்கள் அமைதிகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றனர் என்பதை காட்டுவதே இலங்கை அரச படையினரின் நோக்கம் என கிளிநொச்சிப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சித்திரைப் புத்தாண்டு தமிழ் சிங்களப் புத்தாண்டு என்றே கொண்டாடப்பட்டு வருகிறது. கிளிநொச்சிப் பிரதேசம் எங்கும் சுவரொட்டிகளையும் கட்டவுட்டுக்களையும் வைத்துள்ள இலங்கை இராணுவத்தினர் அதில் சிங்கள இந்துப் புத்தாண்டு என்று எழுதியிருப்பதும் பிரதேச மக்களை விசனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
இதேவேளை இலங்கை இராணுவத்தினர் கிராமம் கிராமாகச் சென்று களியாட்ட நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். அன்றைய நாளில் பல்வேறு போட்டிகளை தாம் நடத்துவதாகவும் அதில் கலந்து கொண்டு பரிசில்களை அள்ளிச் செல்லுமாறும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
அத்துடன் அன்றைய நாள் இராணுவத்தினர் களியாட்ட நிகழ்வில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உணவினை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிங்கள இந்துப் புத்தாண்டைண இணைந்து கொண்டாடி இலங்கையில் உள்ள இன நல்லிணக்கத்தை உலகிற்கு காட்டுவோம் எனவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
நன்றி: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்