கட்டாய ஆட்சேர்ப்பில் இணைந்து கொள்ள மறுத்த யுவதியின் சகோதரனை இராணுவம் பிடித்துச் சென்றது – கேட்பதற்கு யாரும் இல்லையா?
புலிகளின் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பின் போது கதறியவர்கள் இப்போ மௌனித்திருப்பது ஏன்?
இலங்கை இராணுவத்தின் கட்டாய ஆட்சேர்ப்;பில் இணைந்து கொள்ள மறுத்த யுவதி ஒருவரின் சகோதரனை இராணுவம் வலுக்கட்டாயமாகப் பிடித்து சென்ற நிகழ்வொன்று இன்று முல்லைதீவின் முள்ளியவளை பகுதியில் நடந்துள்ளது.
ஜந்திற்கும் அதிகமான வாகனங்களில் சென்ற இராணுவப்புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களே முள்ளியவளை தண்ணிரூற்று கணுக்கேணி பகுதியினைச் சேர்ந்த 28 வயதுடைய பாலச்சந்திரன் விஜயரூபன்- என்பவரை பிடித்து சென்றுள்ளனர். குடும்பஸ்தரான இவர் கைது செய்யப்பட்ட வேளை அங்கு நின்றிருந்த மற்றொரு உறவினனான 25 வயதுடைய சதன் என்பவரும் பிடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
வன்னி இறுதி யுத்தத்தினில் தாய் தந்தை உள்ளிட்ட குடும்பத்தை இழந்த பாலச்சந்திரன் விஜயரூபனுடன் உயிர் தப்பிய சகோதரி ஒருவரும் வாழ்ந்து வந்திருந்தார். இந்நிலையில் குறித்த யுவதியினை இலங்கை இராணுவத்தின் ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் இராணுவத்தினில் இணையுமாறு அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவ முகாம் பொறுப்பதிகாரி நிர்ப்பந்தித்து வந்துள்ளார்.
எனினும் இதற்கு குறித்த யுவதி மறுப்பு தெரிவித்து வந்ததுடன் கைதாகியுள்ள சகோதரனும் படை அதிகாரியுடன் முரண்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவரும் உறவினரான மற்றொரு இளைஞனும் கைதாகியுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக எந்தவொரு ஆவணத்தினையும் சமர்ப்பித்திராத படையினர் அவர்களை தடுத்து வைத்துள்ள இடம்பற்றிய தகவல்களையும் வழங்க மறுத்துள்ளனர்.
குறித்த கைது தொடர்பாக முல்லைதீவிலுள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினில் முறையிடச்சென்ற வேளை அவர்கள் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.