காணாமல் போய்க்கொண்டிருக்கிறது கிளிநொச்சி குளம்:-

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக கிளிநொச்சியில் இருந்து சுழியன்:-
காணாமல் போய்க்கொண்டிருக்கிறது கிளிநொச்சி குளம்:-

தென்னிந்திய சினிமா நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒரு பிரபல்யமான நகைசுவைதான் தனது கிணற்றை காணவில்லை என பொலீஸில் முறைப்பாடு செய்வது.

அது சினிமா நகைசுவை ஆனால் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்களில் கிளிநொச்சியில் உள்ள ஒருவர் கிளிநொச்சி  குளத்தை காணவில்லை என முறைப்பாடு செய்யலாம். கிளிநொச்சி குளம் தற்போது காணாமல் போய்க் கொண்டிருக்கிறது குளத்திற்கு கணகாம்பிகை குளத்திலிருந்து நீர் வருகின்ற ஆற்றுப் படுகையின் இருமருங்கிலும் நிலங்கள் பிடிக்கப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி குளத்தின் பின்பகுதியிலிருந்து குளத்தை நோக்கியும் கட்டிடங்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன.
அதிகாரிகளின் அக்கறையின்மையே கிளிநொச்சி குளம் காணாமல் போய்க்கொண்டிருப்பதற்கு காரணம் என எல்லோரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிடிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி குளத்தின் பின்பகுதியில் சென்று பார்த்தால் அங்கே கட்டப்பட்டுள்ள வீடுகள், மதில்கள், வாயில் கதவுகள், என்பன அந்த மக்கள் வறிய மக்கள் அல்ல என்பதனை அப்பட்டமாவே வெளிப்படுத்துகிறது. கிளிநொச்சி குளத்தின் பின்பகுதியில்  சட்டவிரோதமாக காணிகளை பிடித்திருக்கின்றவர்கள் இந்த மாவட்டத்தில் பல இடங்களில் பல காணிகளுக்கு சொந்தகார்கள்,வசதியானவர்கள், உத்தியோகங்களில் இருப்பவர்கள்  போன்றோரே.
உண்மையிலேயே கிளிநொச்சி குளத்தின் பின்பகுதியில் காணிகளை அத்துமீறி பிடித்தவர்கள் மிகவும் வறிய இந்த மாவட்டத்தில் எந்த இடத்திலும் ஒரு துண்டு காணியே இல்லாதவர்கள் என்றால் கூட மனிதாபிமானம் என்ற வகையில் நோக்கலாம் வேறு வழியின்றி அந்த மக்கள் அங்கு  குடியேறியுள்ளனர் என்று கருதலாம் காணியற்றவர்களுக்கே அரசகாணி எனும் அரசின் கொள்கைக்கு அமைவாகவும் பிரச்சினையை அணுகியிருக்கலாம் ஆனால் அங்கே காணிகளை பிடித்திருப்பவர்கள் குடியிருப்பதற்காக அல்ல அவர்களின் நோக்கமே வேறு தற்போது சிலர் தாங்கள் கட்டிய வீடுகளை வாடகைக்கு கொடுப்பது பற்றியும் ஒப்பந்தங்களை பேசி வருகின்றனர்.
எனவே இந்த நிலைமை தொடர்ந்து சென்றால் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போன்று கிளிநொச்சி குளமும் மாறிவிடும். எனவே உரிய அதிகாரிகள் இதில் செயற்பாட்டு ரீதியிலான நடவடிக்கைக்கு செல்ல வேண்டும். இங்கே காணமல் போய்க்கொண்டிருக்கும் கிளிநொச்சி குளத்தின் நிலைமைக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்;ப்பாசனத் திணைக்களத்தினரே பொறுப்பேற்க வேண்டும் என பல தரப்பினர்களும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
கடந்த வருடம் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சர் எட்மன் மகேந்திரா, கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள பிரதிப்பணிப்பாளர் சுதாகரன, அதன் கிளிநொச்சி பொறியியலாளர் விகிர்தன், கரைச்சி பிரதேச செயலாளர் நாகேஸ்வரன் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்ட பல அதிகாரிகள் குறித்த கிளிநொச்சி குளத்தின் பின் பகுதிக்கு சென்று நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து பின்னர் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்  வலியுறுத்தியிருந்தார்.

இருப்பினும் இற்றைவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடாமையினால் நாளுக்குநாள் மதில்கள் குளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. புதிது புதிதாக இரவோடு இரவாக வீடுகளும் முளைத்து கொண்டிருக்கின்றன. இந்த நிலைமைகளை அறிந்தும் தெரிந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள் அக்கறையின்றி இருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரதேசத்தில் காணிகளை பிடித்திருக்கின்றவர்கள் துறைசார்ந்த அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளவர்கள் எனவும் அவர்களின் செல்வாக்கின் அடிப்படையிலேயே அத்துமீறி செயற்பட்டு வருகின்றனர் எனவும் இதனாலேயே அதிகாரிகளும் கண்டும் காணமல் இருப்பதாகவும் பலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் எந்த நடவடிக்கைகளும் செல்லாமல் இருப்பது மேற்படி கருத்துக்கு மேலும் வலுச் சேர்க்கிறது.

இவ்வாறு கிளிநொச்சி குளத்தின் நிலப்பரப்பு அத்துமீறி பிடிக்கப்பட்டால் எதிர்காலத்தில் கிளிநொச்சி நகருக்கும் அதன் சூழலுக்கும் மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு எற்படும். கிளிநொச்சி நகருக்கான குடிநீர் விநியோக திட்டமும் கிளிநொச்சி குளத்திலிருந்தே மெற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே உரிய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் திணைக்களதிற்கு சொந்தமான குளத்தின் நிலப்பரப்பை அடையாளப்படுத்தி எல்லைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்ததில் எதிர்காலத்தில் கிளிநொச்சியிலிருந்தும் ஒரு வடிவேலு குளத்தை காணவில்லை முறையிடலாம் ஆனால் அது நகைசுவையாக இருக்காது....

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக கிளிநொச்சியில் இருந்து சுழியன்:-














                      
   
                                                                          நன்றி : குளோபல் தமிழ்ச் செய்தி