யாப்பு விதிகளுக்கு முரணாகச் செயற்படும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் (யா.ம.ச) ஊடக அறிக்கை பங்குனி 2014 !!!

யாப்பு விதிகளுக்கு முரணாகச் செயற்படும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் (யா.ம.ச) ஊடக அறிக்கை பங்குனி 2014
யாழ்ப்பாண மருத்துவச் சங்கமானது 1938ம் ஆண்டில் ' Jaffna Clinical Society” என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டு இலங்கையில் செயற்படும் ஒரு பழமை வாய்ந்த பிராந்திய மருத்துவச் சங்கம் ஆகும். மருத்துவச் சமுதாயம் மற்றும் பொதுவான சமுதாயத்தின் நன்மைக்காக 1969 இல் இருந்து யாழ்ப்பாண மருத்துவச்சங்கமாக மீளமைக்கப்பட்டு ஒரு 'தன்னார்வ சமூக சேவை நிறுவனமாக' சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சங்கத்தின் யாப்பு காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு கடைசித் திருத்தமானது 2011 இல் மேற்கொள்ளப்பட்டு 2007 ஆம் ஆண்டு 7ஆம் இலக்க கம்பனிகள்; சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யா.ம.சங்கத்தில் பொறுப்பான பதவிகளை வகித்த கீழ்வரும் உறுப்பினர்களாகிய நாங்கள் சங்கம் அமைக்கப்பட்ட நோக்கங்களை நீண்டகால நோக்கில் அடைவதற்கு முரணாக மேற்கொள்ளப்படும் அண்மைக்கால நகர்வுகளினால் கவலையடைந்துள்ளோம். இது தொடர்பாக மிகவும் கவலையுடன் யாப்புக்கு முரணாக இடம்பெற்ற பின்;வரும் நிகழ்வுகளை உங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

(A)    எமது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சரியான அறிவித்தல் விடுக்கப்படாது வருடாந்தப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. யா.ம.ச. நிர்வாக சபை 2013 என்ற பெயரில் கையொப்பமிடப்படாத (A என அடையாளமிடப்பட்ட) ஒரு துண்டு அழைப்பிதழ் 10 நாட்களுக்கு முன்னராக சில உறுப்பினர்களால் பெறப்பட்டது. இது யா.ம.ச. செயற்பாடுகளுக்கு வெளியே தீட்டப்பட்ட திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு உறுப்பினர்கள் என்று கூறப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் புதிய உறுப்பினர்களை வரவேற்பது போல இருக்கிறது. இந்தத் துண்டு அழைப்பிதழ் யாப்பின் 14.1.2 பிரிவில் கூறப்பட்ட 'வருடாந்தப் பொதுக் கூட்டத்திற்கு குறைந்தது 30 நாட்கள் முன்னர் அனைத்து உறுப்பினர்களுக்கும் முழுமையான நிகழ்ச்சிநிரல் அனுப்பப்படவேண்டும்' என்பதற்கு முரணாக இருக்கிறது.

(B)    வருடாந்தப் பொதுக் கூட்டம் என்ற பெயரில் நடாத்தப்பட்ட கூட்டம் மாசி 2014 இல் நடாத்தப்பட்டிருக்கும் நிலையில் யாப்பின் 14ம் பிரிவு வருடாந்தப் பொதுக்கூட்டம் ஆனி மாதத்தில் நடாத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது. விசேட சந்தர்ப்பங்களில் நிர்வாக சபையானது சித்திரை 1ம் திகதிக்கும் வைகாசி 31க்கும் இடையில் வருடாந்தப் பொதுக் கூட்டத்தைக் கூட்டலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னைய ஒரு வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் யாப்பு திருத்தப்பட்டிருந்தால் ஒழிய மாசி மாதத்தில் வருடாந்தப் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு யாப்பில் இடமில்லை.

மேலும் 26 மாசி 2014 இல் வருடாந்தப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டம் யா.ம.சங்கத்தின் யாப்பை வெளிப்படையாக மீறியுள்ளது.

(C)    யாப்பின் 14.1.1 பிரிவின் பிரகாரம் வருடாந்த பொதுக் கூட்டத்தில் நிதிக் கணக்குகளைப் பரிசோதிப்பதற்கு கணக்குப் பரிசோதகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்பதுடன் சங்கத்தின் பரிசோதிக்கப்பட்ட நிதிக்கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும். 26 மாசி 2014 இல் இடம்பெற்ற கூட்டத்தில் யாப்பில் குறிப்பிட்டுள்ளப்படி பரிசோதகர்கள் நியமிக்கப்படவுமில்லை. மேலும் யாப்பின் 13.2.3 பிரிவில் 'வருடாந்தப் பொதுக்கூட்டத்துக்கான அறிவித்தலுடன் 15 வேலை பார்க்கும் நாட்கள் முன்னராகவே சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் வருடாந்த நிதிக் கணக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது.

(D)    13.2.1 ஆம் பிரிவுக்கு முரணாக உதவிப் பொருளாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யா.ம.சங்கத்தின் யாப்பில் உதவிப் பொருளாளர் பதவி காணப்படவில்லை.

E)    13.2.4 பிரிவின் பிரகாரம் தேர்தலை முன்னெடுக்கும் அதிகாரி நியமிக்கப்பட்டு நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். தேர்தலை முன்னெடுக்கும் அதிகாரி நியமிக்கப்படவில்லை என்பதுடன் வைத்தியகலாநிதி திருமதி சி. உதயகுமாரன் “President Elect”பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தவரை தலைவராககப் பதவி ஏற்குமாறு அழைத்ததுடன் பின்னர் அவர் வந்து தன்னுடைய செயலாளரையும் ஏனைய பல பதவிகளுக்கும் பெயர்களை முன்மொழிந்து சுயாதினமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தவில்லை. 13.2.3 பிரிவின்படி தலைவர், செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகசபை உறுப்பினர்களும் பெயர்கள் முன்மொழியப்பட்டு தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த வருடங்களில் இடம்பெற்றது போலவும் 13.2.3 பிரிவின் படியும் தலைவர் யா.ம.சங்கத்தின் உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதுடன் “President Elect” தலைவராக அடுத்த வருடம் தெரிவு செய்யப்படுவதாக யாப்பில் குறிப்பிடப்படவில்லை.

(F)    உறுப்பினர் அல்லாதோரை நிர்வாக சபையில் சேர்த்தல்: உறுப்பினருக்கான சந்தாப்பணம் செலுத்தாத ஒருவர் 26 மாசி 2014 இல் நடத்தப்பட்ட கூட்டத்தில் நிர்வாக சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இதை விட யாப்பின் 11.2.2 பிரிவுக்கு முரணாக கூட்டம் நடப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன்னர் உறுப்பினருக்கான சந்தாப்பணத்தை செலுத்தியவர்கள் நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒரு தகுதி வாய்ந்த நபர் உறுப்பினருக்கான சந்தாப்பணத்தை செலுத்துவது மாத்திரமல்லாமல் சங்கத்தின் செயலகத்துக்கு உரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதுடன் அந்த விண்ணப்பம் நிர்வாக சபையினால் பரிந்துரைக்கப்பட்டால் மாத்திமே ஒருவர் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படமுடியும் என 11.2.2 பிரிவு கூறுகிறது.

(G)    ஐப்பசி 2013 இலிருந்து செயலாளர் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளை அனுப்பாத காரணத்தால் மாதந்தோறும் நடக்கும்; நிர்வாக சபைக் கூட்டங்கள் குறைந்த பட்ச எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் சமூகமளிக்காமையினால் செயலிழந்தது. அதன்பின்பு செயலாளர் செயலகத்தில் இருந்த யாப்பை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு யாப்புக்கு முரணாண வகையில் வருடாந்தப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் கூட்டம் கூட்டுவது செயலாளரின் இரகசியத்திட்ங்களை நிருபிக்கிறது.

(h)    13.2.2 பிரிவின் பிரகாரம் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஒரு வருட காலத்துக்கு தெரிவு செய்யப்படுவார்கள். 26 மாசி 2014 இல் இடம் பெற்ற கூட்டத்தில் சிரேஷ்ட பிரதித்தலைவர் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் தன்னுடைய ஒரு வருட பதவிக்காலம் முடியவில்லை என்று அறிவித்தும் மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் ஒரு வருடகாலத்துக்கு மாதந்தோறும் மருத்துவ முகாம்களை ஒழுங்கு செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆயினும் வைத்திய கலாநதி திருமதி. சி உதயகுமாரன் யாப்பின் 15.5 ஆம் பிரகாரம் நடப்பு தலைவராகவும் யாப்புக்கு சரியான அர்த்தம் சொல்லும் பொறுப்பை உடையவராக இருந்தும் யாப்பைப் பற்றிய போதிய அறிவின்றி புதிய சிரேஷ்ட பிரதித் தலைவரை தெரிவு செய்து இருந்தார்.

மேலே குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் நாங்கள் 26 மாசி 2014 இல் நடந்த கூட்டம் மிகவும் தவறானது எனவும் யா.ம.சங்கத்தின் யாப்பின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததும் என்றும் தெரிவிக்கிறோம். நல்லொழுக்கத்தைப் பேணவேண்டியவர்கள் என்று எதிர்பார்க்கப்படும் மருத்துவ தொழில் வல்லுனர்கள் யாப்புக்கு முரணான வகையில் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக இரகசியமாகவும் மற்ற உறுப்பினர்களைப் பாதிக்கும் வகையிலும் செயற்படுவது மிகவும் வருந்தக்கதுமாகும்.

ஆகவே நாங்கள் யாழப்பாண மருத்துவச் சங்க உறுப்பினர்களை

(1) யாப்பை மதித்து அதன்படி நடக்குமாறும் மற்றும் அதன்படி ஒரு முறையான வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறும்.

(2) நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் வெளிப்படைத்தன்மையைப் பேணுதல் மற்றும் சரியாகப் பரிசோதிக்கப்பட்ட கணக்குகளைப் பேணுவதோடு குறிப்பாக மிகவும் கஸ்டத்தில் இருக்கும் மக்களுக்கு மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதிகளை வேறு திசையில் திருப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கோள்கிறோம்.
நன்றி

DR. முரளி வல்லிபுரநாதன்
சிரேஷ்ட பிரதித்தலைவர்
யாழ்ப்பாண மருத்துவச்சங்கம் 2013ஃ2014
DR. ந. ஜெயக்குமாரன்
தலைவர்
யாழ்ப்பாண மருத்துவச்சங்கம் 2012ஃ 2013