எனது கணவருடன் விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களும் சரணடைந்தனர் - யோகியின் மனைவி யாழில் சாட்சியம் !


சரணடைந்ததவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பதால் வட்டுவாகலில் இராணுவத்திடம் எனது கணவர் சரணடையும் போது அவருடன் விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களும் சரணடைந்தனர் என அரசியல் துறை பொறுப்பாளர் யோகியின் மனைவி யாழ்ப்பாணத்தில் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார்.

காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவினால் மெற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி இன்று மூன்றாவது நாள். இன்றைய பதிவுகள் மாவட்ட செயலகத்தில் காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.அதன்போதே யோகியின் மனைவி மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

கடந்த 17.5.2009 வட்டுவாகலில் நானும் எனது கணவரும் பிள்ளைகளும் ஒன்றாக இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டோம்.

அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து விடுதலைப்புலிகளையும் பொறுப்பாளர்களையும் சரணையுமாறும் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்குவோம் என்று ஒலிபெருக்கி மூலம் இராணுவத்தினர் அறிவித்தனர்.

அதன்போது எனது கணவர் விடுதலைப்புலிகளின் பல பொறுப்பாளர்கள் இராணுவத்திடம் சரணடையப்போவதாக தன்னிடம் தெரியப்படுத்தியதாக என்னிடம் தெரிவித்தார்.

அதனையடுத்து குடும்பத்துடன் சரணடைய போனோம் ஆனால் எங்களை திருப்பி அனுப்பிவிட்டு என் கணவரை பஸ்சில் ஏற்றிக்கொண்டு ஓமந்தை நோக்கிச் சென்றனர்.

நான் அதனைப் பார்த்து கொண்டு நின்றேன். என் கணவருடன் விடுதலைப்புலி முக்கிய பொறுப்பாளர்கள் என 50 பேருக்கு மேல் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடன் மொழிபெயர்ப்புக்காக கிறித்தவ பாதிரியார் யோசப் பிரான்சிஸ் அவர்களும் சென்றதை நான் கண்டேன்.

11678 போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர் என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி எனது கணவரும் அவர்களில் ஒருவர் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றேன்.

உயிர்களைப்பாதுகாக்கதான் இராணுவத்தை பயன்படுத்திதாக அரசு கூறுகின்றது.எனவே என் கணவரும் பாதுகாக்கப்படுவார் என்று நான் நம்புகின்றேன்.

2010 கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்து மூன்று வருடமாகியும் எந்தப்பதிலும் இல்லை.

நாட்டிற்கு பல அபிவிருத்தியைச்செய்து கொண்டிருக்கும். இந்த அரசு இந்தக்காலத்திலேயே எமக்கு நல்ல பதிலை வழங்க வேண்டும். அத்துடன் ஆட்சியிலுள்ளவர்களின் மனங்கள் மாறி உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதுவே எமது வேண்டுகோள் என்றார்.