தமிழர் தலைமைத்துவத்தை நாசப்படுத்தும் நரித்தந்திரம் !!!


             தமிழர் தலைமைத்துவத்தை  நாசப்படுத்தும் நரித்தந்திரம்

  • வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் நம்பிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொன்று விட்டார் என்று, கடந்த வாரம் ஆங்கில இதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக, மானிப்பாயில் நடந்த கூட்டம் ஒன்றின் உரையாற்றிய சில நாட்களில் தான் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைக்கும் மத்திய அரசுக்கும் இடையில் புரிந்துணர்வுச் சூழல் உருவாகக் கூடிய நிலை தற்போது இல்லை என்பதை, முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்து வெளிப்படையாக்கியுள்ளது. போருக்குப் பின்னர், இனங்களுக்கு இடையில், மத்திய அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், அத்தகைய நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளது என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.  
    போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், நடத்தப்பட்ட தேர்தலின் மூலம் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபையை அரசாங்கம் நடத்துகின்ற முறையே, இந்தக் கேள்விக்கு கணிசமான விடையைக் கொடுத்து விடக் கூடியது. 
    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டது என்பதால், வடக்கு மாகாணசபையில் அதனுடன் இணைந்து செயற்பட வேண்டுமா என்று அரசாங்கத்துக்குள் ஒரு ஈகோ பிரச்சினை இருந்தது.  ஆனால், வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட போது, முதலமைச்சராக பொறுப்பேற்ற சி.வி.விக்னேஸ்வரன், அரசாங்கத்தின் அத்தகைய ஈகோ சிக்கல்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒருவராக இருந்தார். அவருடன் கைகுலுக்கிக் கொள்வதில் அரசாங்கத்துக்கு எந்த தடையும் இருந்திருக்கவில்லை.  
    ஓய்வுபெற்ற நீதியரசரான அவர் மூலம் வடக்கு மாகாணசபையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மிகவும் உகந்த சூழலே காணப்பட்டது. அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான், வடக்கு மாகாணசபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தைப் புறக்கணித்து, விக்னேஸ்வரன் அலரிமாளிகையில், ஜனாதிபதி முன்பாக முதலமைச்சராகப் பதவியேற்க முன்வந்தார். ஆனால், அந்த வாய்ப்பை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இதுவரை அதைச் செய்யவில்லை. மாறாக, வடக்கு மாகாணசபையுடன் முரண்பாட்டை வளர்த்துக் கொள்வதிலேயே அரசாங்கத்தின் கவனம் உள்ளது. பதவியேற்று கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகியும், நிர்வாகத்தை சுமுகமாக நடத்துவதற்கு அரசதரப்பில் இடையூறுகள் இருந்ததால், அதனைத் தீர்ப்பதற்காக மீண்டும் அலரிமாளிகைப் படிக்கட்டுகளில் ஏறியிருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். 
    கடந்த மாதம் 2ம் திகதி நடந்த இந்தச் சந்தப்பில்,சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்கும் விவகாரம் குறித்தும், தலைமைச்செயலரை மாற்றுவது குறித்தும் பேசப்பட்டது. 
    ஆளுனரின் பதவிக்காலம் சில மாதங்களே உள்ள நிலையில், அவர் ஓய்வுபெற்றதும் புதியவரை நியமிப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார் ஜனாதிபதி. அதேவேளை, தலைமைச்செயலரை மாற்றுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். ஒரு மாதம் கடந்தும், இன்னமும் தலைமைச்செயலரை மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில், வடக்கு மாகாணசபையின் தலைமைச்செயலர், நிர்வாகசேவை அதிகாரிகள் சங்கத்தின் மூலம் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்தி, தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், மாகாணசபை தம்மைப் பழிவாங்கப் பார்ப்பதாகவும், கண்ணீர் சிந்தினார். இதையடுத்து, கடந்த 19ம் திகதி, தெல்லிப்பழையில் நடந்த புற்றுநோய் மருத்துவமனை திறப்பு விழாவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதியை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்தித்த போது, தலைமச்செயலரை மாற்றுவதற்கு காலம் கனியும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார். 
    தலைமைச்செயலரை இடம்மாற்றினால், நாடளாவிய ரீதியாக வேலை நிறுத்தம் செய்வோம் என்று நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் மிரட்டுவதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி காரணம் கூறியிருந்தார். 
    ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரனோ, மாகாண தலைமைச்செயலரை முதல்வரின் இணக்கப்பாட்டுடன், ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்று மாகாணசபை சட்டத்தின் 31வது பிரிவில் கூறப்பட்டுள்ளது என்றும், சட்டத்தில் அதுபற்றி தெளிவாக கூறியுள்ள போது அதற்குள் நுழைவதற்கு நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
    வடக்கில், அரசாங்கத்தின் விருப்புக்கேற்றவாறு நிர்வாக சேவை அதிகாரிகள் தான்தோன்றித் தனமாக, இடமாற்றம் செய்யப்பட்ட போது- பழிவாங்கப்பட்ட போதெல்லாம், குரல் கொடுக்காத, நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம், வடமாகாண தலைமைச்செயலருக்காக மட்டும் குரல் கொடுக்க முன்வந்தது வடக்கிலுள்ள நிர்வாக சேவை அதிகாரிகள் பலரையும் விசனமடையச் செய்துள்ளது. 
    இந்தச் சங்கத்தின் பிராந்தியக் கூட்டம் முன்னெப்போதுமில்லாத வகையில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்டது. ஆனால், அதில் 30 வரையிலான அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். ஏனையோர் புறக்கணித்து விட்டனர். ஆளுனரையோ, வடக்கு மாகாண தலைமைச்செயலரையோ மாற்றுவது மட்டமன்றி வடக்கு மாகாணசபையின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றுவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்கும் போது, கேட்பதையெல்லாம் தருவதாக கூறும் ஜனாதிபதி அந்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றுவதில்லை. இதனை முதலமைச்சர் விக்னேஸ்வரனே பொது மேடையில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். 
    முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த மாதம் 2ம் நாள் அலரி மாளிகைக்கு சென்று சந்தித்த போது அவருக்கு ஒரு தரப்பில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. 
    அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்படுவதன் மூலமே, வடக்கு மாகாணசபையால் சாதிக்க முடியும் என்று அவர் மாகாணசபை உறுப்பினர்களை சமாதானப்படுத்தியிருந்தார். ஆனால், அந்த நம்பிக்கையை ஜனாதிபதி கொன்று விட்டதாக இப்போது கூறியுள்ளார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை வடக்கு மாகாணசபையை பழிவாங்கும் நோக்கத்தை மட்டும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அதற்கும் அப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும், தமிழ் மக்களிடத்திலும், முதல்வர் விக்னேஸ்வரன் கொண்டுள்ள செல்வாக்கை நாசப்படுத்தும் எண்ணமும் இருப்பதாகத் தெரிகிறது.  
    எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முனைந்தாலும், அதனை உதாசீனப்படுத்துவதன் மூலம், வடக்கு மாகாணசபையில், உள்ள கடும் போக்கு எண்ணம் கொண்ட உறுப்பினர்கள் மத்தியில் விக்னேஸ்வரனின் செல்வாக்கை உடைக்கப் பார்க்கிறது அரசாங்கம். 
    ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில், கடும் போக்கு உறுப்பினர்கள் முதல்வருடன் முரண்பட்டிருந்தனர். அரசாங்கத்தின் இந்த நரித்தந்திரத்தினால், முதல்வருக்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ஓய்வுபெற்ற நீதியரசர் என்ற வகையில், அரசியல் நாகரீகங்களுக்கு அப்பால் செல்ல விரும்பாத ஒருவராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் இருப்பதால், எல்லா அரசியல் சித்து விளையாட்டுகளையும் கரைத்துக் குடித்த கொழும்பின் ஆட்சியாளர்கள் முன்பாக தாக்குப்பிடிக்க முடியாதுள்ளது. இந்தப் பலவீனமே, முதல்வர் விக்னேஸ்வரனை வீழ்த்தி விடும் என்று அரசாங்கம் நம்புவதாகத் தெரிகிறது. 
    மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் விக்னேஸ்வரன் பெரும் வெற்றி பெற்ற போது அதனால் மிரட்டு போயிருந்தது அரசாங்கம். 
    ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்கு பின்னர் தமிழர்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற ஒரு தலைமை உருவானதை- சிங்கள ஆட்சியாளர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான், சிங்கள கடும் கோட்பாட்டாளர்கள் அவரை வேட்டி கட்டிய பிரபாகரன் என்று விமர்சித்தனர்.  சீருடை தரித்திருந்த பிரபாகரனை போர்க்களத்தில் வீழ்த்தியது போலவே, இப்போது வேட்டிகட்டிய பிரபாகரனை சதிமூலம் வீழ்த்த எத்தனிக்கிறது கொழும்பு. அதற்கு ஒரே வழி, அவரை கையாலாகாத ஒருவராக, அரசாங்கத்துடன் நெகிழ்ந்து போகும் ஒருவராக � தமிழர்களிடத்தில் வெளிப்படுத்துவதே சிறந்து உபாயமெனக் கருதுகிறது அரசாங்கம். அதனால் தான், அவரது கோரிக்கைகள் அனைத்தையும், நிறைவேற்றாமல், இழுத்தடித்து, அவருக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை குறைக்க முனைகிறது.

    வடக்கு மாகாணசபையில் உள்ள கடும் போக்காளர்களிடையே வளர்க்கப்படும் இந்த அதிருப்தி, இயல்பாகவே அவரை செல்வாக்கற்றவராக மாற்றி விடும் என்பது அரசாங்கத்தின் கருத்தாகத் தெரிகிறது. 
    இது அரசாங்கத்தின் ஒரு ஆபத்தான விளையாட்டும் கூட.  
    தமிழ்மக்களைப் பொறுத்தவரையில், முதல்வர் விக்னேஸ்வரனை எவ்வாறு பாரக்கிறார்கள் என்பதை விட, அரசாங்கத்தின் இந்த விளையாட்டை சர்வதேச சமூகம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை. 
    ஏனென்றால், சீருடையில் இருந்த பிரபாகரனுக்கு வேட்டி கட்டிப் பார்க்க ஆசைப்பட்ட, சர்வதேச சமூகம், வேட்டிய கட்டிய ஒரு தலைமையை சீருடை தரிக்கும் நிலைக்குத் தள்ளிச் செல்வதை ஒருபோதும் விரும்பாது. அரசாங்கத்தின் அழுத்தங்களும், வடக்கு மாகாணசபை சந்திக்கும் ஏமாற்றங்களும், ஆபத்தான விளைவுகளுக்கே வித்திடும் என்பதை சர்வதேச சமூகம் உணராமல் போகாது. 
    தமிழர்களின் செல்வாக்குப் பெற்ற ஒரு தலைமையை - தமிழர்களைக் கொண்டே கவிழ்ப்பதற்கு அரசாங்கம் செய்யும் சதிக்குத் தமிழர்கள் பலிக்கடாவாகுவதை சர்வதேச சமூகம் விரும்பாது. 
    தமிழர்கள் மத்தியில் உறுதியான ஒரு தலைமைத்துவம் இருந்தால் தான், நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும் என்றே சர்வதேச சமூகம் சிந்திக்கும். அத்தகையதொரு வாய்ப்பை மலினத்தனமான அரசியல் தந்திரங்களினூடாக அரசாங்கம் நாசப்படுத்துவதை சர்வதேச சமூகம் விரும்பாது. இந்தநிலையில், வடக்கு மாகாணசபையுடன் இணங்கிப் போக மறுக்கும் அரசாங்கத்தின் போக்கு, பொறுப்புக்கூறல் விவகாரத்தினால் தோன்றியுள்ளதைப் போன்று இன்னொரு சுருக்குக் கயிறாக அதன் கழுத்துக்கே ஆபத்தாக முடியலாம்.
                                                              InfoTamil.ch:தொல்காப்பியன்