பருத்தித்துறை கடலில் நீர் மட்டம் அதிகரிப்பு:- கிராமங்களுக்குள் நீர், மக்கள் இடம்பெயர்வு, முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பு

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வானிலை மோசமடைந்துள்ளது. கிழக்கு கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று எச்சரித்துள்ளது.

அதேநேரம் மன்னார் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு கடலில் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

200 மில்லிமீற்றர் வரை மழைபெய்யும் இதன்போது அலை சுமார் 3 மீற்றர் உயரத்துக்கு மேலெழும் என்றும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு கரையோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வானிலையில் ஏற்பட்ட தீவிரத் தன்மையை அடுத்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை கரையோரத்தில் வசிக்கும் மக்கள் 100 மீற்றர் தூரம் வரை விலகியிருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு வரையான காற்றழுத்தம் மற்றும் கடல் கொந்தளப்பு காரணமாக திருகோணமலை மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கடற்றொழிலில் ஈடுபடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடர் முகாமைத்துவ நிலைய அறிவித்தல்களின் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாகவே இம் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடவில்லை என தெரிவித்தனர்.

இந்நிலையில் திருகோணமலையில் நேற்று அதிகாலையிலிருந்து கடும்காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருமலை தொடக்கம் மட்டக்களப்பு வரை காற்றழுத்தம்: திருகோணமலை கடல் கொந்தளிப்பதன் காரணமாக கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவ படகுகளை உயர்வான இடங்களிற்கு மீனவர்கள் நகர்த்தியுள்ளனர்.
கடல் அலையின் தாக்கம் இன்று கரையை நோக்கி தீவிரமாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன் மீனவர்களுக்கும் இலங்கையின் அனர்த்த முகாமை மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை கிழக்கு கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மன்னார் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு கடலில் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

200 மில்லிமீற்றர் வரை மழைபெய்யும். இதன்போது கடல் அலை சுமார் 3 மீற்றர் உயரத்துக்கு மேலெழும்பும் என்றும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பு: மக்கள் இடம்பெயர்வு

முல்லைத்தீவு கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து கள்ளப்பாடு, அலம்பில், செம்மலை, வட்டுவாகல் உள்ளிட்ட கரையோர கிராமங்கள் உள்ளிட்ட கரையோரங்களைச்சேர்ந்த மக்கள் மேட்டு பிரதேசங்களிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர்.

கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளதை அடுத்தே அந்த பகுதிகளைச்சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்துள்ளனர்.

முல்லைத்தீவின் கரையோரக் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், கடல்நீர் 3 அல்லது 4 மீற்றர் தூரத்திற்கு நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

பருத்தித்துறை கடலில் நீர் மட்டம் அதிகரிப்பு

இதேவேளை, யாழ். வடமராட்சி பருத்தித்துறை கரையோரப்பகுதிகளில் கடல் நீர் மட்டம் வழமைக்கு மாறாக நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தியதையடுத்து கரையோரங்களிலுள்ள மக்கள் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் சென்றிருப்பது நல்லதென அப்பகுதி இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்தே கரையோரங்களில் இருக்கும் மக்கள் ஒரு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.