இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைக்கு ஒப்பானது – வட மாகாணா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:- மாகாண சபை சார்பில் அனந்தி சசிதரன் ஜெனிவா செல்ல சபை அங்கீகாரம் !!!

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைக்கு ஒப்பானது என வட மாகாண சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இன்று காலை கூடிய வடமாகாண சபையின் 4ஆவது கூட்டத் தொடரில், இந்த பிரேரனையை மாகாண சபை உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம் முன்மொழிந்து உரையாற்றினரர்.

இலங்கையில் இடம்பெற்றதும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதும் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் காணாமல் போனது, மற்றும் கொல்லப்பட்டது உள்ளிட்டவற்றை சுட்டிக் காட்டுவதோடு திட்டமிட்ட இனப் படுகொலைக்கு ஜெனோசைட்டிற்கு ஒப்பானது எனப்படும் மனிதப் படுகொலைகளை சர்வதேசத்தின் விசாரணைக்கு உட்படுத்தி அவற்றை வெளிப்படுத்த வேண்டும் என்ற பிரேரனையை சிவாஜிலிங்கம் முன்வைத்தார். அத்துடன் இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரிப்பதாகவும், சல்வதேசத்தின் தலையீடு மத்தியஸ்த்தம் இன்றி தமிழ் மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் என்பதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதும் அந்த பிரேரனையில் சுட்டிக் காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைக்கு ஒப்பானது என்பதனை நிரூபிக்கும் வகையிலும், அரச அதிகாரிகளின் புள்ளி விபரங்களில் காணாமல் போனவர்கள்; 146679 பேர் என்பதனை உறுதிப்படுத்தும் வகையிலும், அரசின் கணக்கெடுப்புக்கு மாறாக மாகாண சபையால் சர்வதேசத்தின் மேற்பார்வையில் சுயாதீன கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அனந்தி சசிதரனால் கொண்டுவரப்பட்ட பிரேரனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் திருக்கேதீஸ்வரப் புதைகுழி தொடர்பாக மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகளும் இரசாயனப் பகுப்பாய்வும், ஐநாவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரேரனையும் முன்மொழியப்பட்டு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் இலங்கைப் படையினரால் பயன்படுத்தப்படும் கால்நடைப் பண்ணைகள், கால்நடைகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற பிரேரனைகளும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையில் மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் கமலேந்திரன் சிறைச்சாலையில் இருந்து மகாணசபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கூட்டத் தொடரில் கலந்துகொண்டார்.


முதலாவது இணைப்பு:-


ஜெனீவாவினில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள போர்குற்ற பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் வடக்கு மாகாண சபை தனது உறுப்பினரான அனந்தி சசிதரனை அங்கு அனுப்பவுள்ளது. இன்று இடம்பெற்ற பேரவையின் 5 ஆவது அமர்வினில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இவ்வறிவிப்பினை விடுத்தார்.

கைதடியிலுள்ள வடமாகாணசபைக் கட்டடத்தில் இன்று காலை 9.45 மணியளவில் பேரவைக்கூட்டம் ஆரம்பமாகியது. இன்றைய அமர்வில் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றது இன அழிப்பிற்கு ஒப்பனாதென்பதை நிருபிக்கும் வகையில் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களது உண்மையான எண்ணிக்கையான 146679 இனை சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்த மாகாணசபை புள்ளிவிபரங்களை திரட்டி சர்வதேசத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற அனந்தியின் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அத்துடன் ஜெனீவாவினில் செயற்படும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுடன் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள போர்குற்ற பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வடக்கு மாகாண சபை தனது உறுப்பினரான அனந்தி சசிதரனையும் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

யுத்தத்தின் போது இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேசம் நீதி வழங்கவேண்டும், மன்னார் மனித புதைகுழி தொடர்பான சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை ஆகிய முக்கிய பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பக்கச்சார்பற்ற பன்னாட்டு விசாரணையினை ஜ.நாதுணையுடன் முன்னெடுப்பதுள்ளிட்ட சிவாஜிலிங்கத்தின் மூன்று பிரேரணைகளும் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமர்வுகள் தொடர்கின்றன. மேலும் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் ஜெனிவாவிற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

                                                                                                            நன்றி:
                                                                                   குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.