தமிழ் மாணவி இங்கிலாந்து விண்வெளி ஆய்வு பணிக்கு தேர்வு !!!



இங்கிலாந்தில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த தமிழ் மாணவி இங்கிலாந்து நாட்டின் விண்வெளி ஆய்வு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பு உச்சகட்ட போருக்கு பிறகு உயிருக்கு பயந்த லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் தங்களின் நிலம், வீடு, தொழில் ஆகியவற்றை எல்லாம் துறந்துவிட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.


அவ்வகையில், தற்போது இங்கிலாந்தில் வசித்துவரும் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த மாணவி சியோபன் ஞானகுலேந்திரன் என்பவர் அங்குள்ள விண்வெளி கல்விக் கூடத்தில் சேர்ந்து விண்வெளி ஆய்வு தொடர்பாக பயின்று வருகிறார். இங்கு சுமார் 30 ஆயிரம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், செயற்கைக் கோள்களை ஏவுதல், விண்வெளியில் தங்கியிருந்தபடியே பூமியில் நிகழும் அசைவுகளையும், மாற்றங்களையும் கண்காணித்து பதிவு செய்வது போன்ற துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த மாணவர்களில் சிறந்து விளங்கும் இருவரை இங்கிலாந்து அரசு தகுதி அடிப்படையில் தேர்வு செய்து அந்நாட்டின் சார்பில் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கின்றது. அவ்வகையில், இந்த முறை தேர்வானவர்களில் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த சியோபன் ஞானகுலேந்திரன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த டயானா ஆகிய 2 மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்.

தேர்வான இலங்கை தமிழ் மாணவி சியோபன் ஞானகுலேந்திரன் நுண்ணுயிரியல் பற்றிய பாடப்பிரிவில் சிறந்து விளங்கியவராவார். விரைவில் இவர்கள் இருவரும் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் ஆய்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அங்கிருந்தபடியே விண்வெளியில் உள்ள நுண்ணுயிரியல் பற்றி இவர்கள் ஆய்வு செய்வார்கள் என இலங்கையில் இருந்து வெளியாகும் இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.