நெல்சன் மண்டேலா விடைபெற்றார்; நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.!!!

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும், நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவருமான நெல்சன் மண்டேலாவின் உடல் அவரது சொந்த கிராமமான குனுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வயது முதுமையால் ஏற்பட்ட தளர்ச்சி மற்றும் உடலநலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மண்டேலா (95) கடந்த 5-ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் காலமானார். 10 நாள்களாக துக்கம் கடைபிடிக்கப்பட்டு இன்று இறுதிச்சடங்கு நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சி தனிப்பட்டது என்பதால் அதில் மண்டேலாவின் மனைவி கிரகா மஷேல், முன்னாள் மனைவி வின்னி மடிகிசேலா மண்டேலா உள்ளிட்ட 450 பேர் பங்கேற்றனர்.
அரசு சார்பிலான இறுதிச்சடங்கு ஏற்பாடு GMT+05.30 நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கியது. அவரது வயதை பிரதிபலிக்கும் வகையில் 95 மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற 2 மணி நேர பொதுச்சடங்கில் அழைப்பின்பேரில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ், ஈரான் துணை அதிபர், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் அதிபர்கள் உள்ளிட்ட 4500 விருந்தினர்கள் வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா, 95 ஆண்டுக்கு முன் தொடங்கிய இவரது தனித்துவமிக்க பயணம் இன்றுடன் முடிகிறது என வர்ணித்தார்.
மண்டேலாவின் நீண்ட கால நண்பரான ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுட்டுவும் இறுதிச் சடங்கைக்காண வந்திருந்தார். முன்னதாக, மண்டேலா உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி அவரது வீட்டிலிருந்து பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த வெண்மை நிற குடிலுக்கு, ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டதுடன் இறுதிச் சடங்கு தொடங்கியது.
தெம்பு இனத்தவரைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது குலவழக்கப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. மண்டேலா சாதனைகள், அவரது வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை நினைவு கூரும் பாடல்களை அவர்கள் பாடி அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கின்போது குல மரபுப்படி எருமை பலி கொடுக்கப்பட்டது.
மண்டேலாவின் உடல் இறுதிச் சடங்குக்காக, அவரது சொந்த கிராமமான குனுவுக்கு பிரிட்டோரியாவில் உள்ள வாட்டர்குளூப் தளத்திலிருந்து விமானப்படை விமானத்தில் சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது. விமானம் எம்ததா நகரத்தில் தரையிறங்கியதும் அங்கிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ள குனு கிராமத்துக்குச் கொண்டுவரப்பட்டது.

"பயணம் முடிந்தாலும் வழித்தடம் தொடரும்"

நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்கான நீண்ட பயணம் முடிந்து விட்டாலும் அவரது வழித்தடங்களை பின்பற்றி கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தென்னாப்ரிக்காவின் தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா கூறினார்.
தென்னாப்ரிக்க மக்கள் அடுத்தவர்கள் மீது குற்றஞ்சொல்வதை நிறுத்திவிட்டு, மண்டேலாவை முன்னுதாரணமாகக் கொண்டு, அவர் எப்படி நாட்டை வழி நடத்தினாரோ அதுபோல நாட்டை வழிநடத்த வேண்டும் என்று அவரது பேத்தி நண்டி தெரிவித்துள்ளார்.
மண்டேலாவுடன் சிறையில் இருந்த அஹ்மத் கத்ராடா, தான் ஒரு சகோதரனை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கை இப்போது சூனியமாக உள்ளதாகவும் பிரச்சனைகள் என்றால் யாரிடம் செல்வது என தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.



நன்றி
BBC-Tamil&Eng