மனைவியின் சாவு குறித்து விசாரணை கோரும் கணவன் !!!

கிளிநொச்சி மலையாளபுரத்தில், கர்ப்பமாக இருந்தபோது கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற பெண் ஒருவரின் மரணத்தில் சந்தேகம் எழுந்திருப்பதாக மனித உரிமை ஆணைக்குழுவினரிடம் அவருடைய கணவன் முறையிட்டிருக்கின்றார். இராமு சதீஸ்குமார் என்பவரே 26 வயதுடைய தனது மனைவி மஞ்சுளாவின் மரணம் தொடர்பாக இவ்வாறு முறையிட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.

கணவனாகிய தனக்குத் தெரியாமலும், தன்னிடம் எந்தவிதமான ஆலோசனையும் கேட்காமலும், கடந்த செப்டம்பர் மாதம் தனது மனைவியை வைத்திய அதிகாரிகள் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தனது மனைவி உட்பட சுமார் 50 பெண்கள் இவ்வாறு கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் சதீஸ்குமார் கூறியுள்ளார்.

'இந்தச் சம்பவம் நடைபெற்ற 10 நாட்களின் பின்னர், மனைவிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தனியார் வைத்தியர் ஒருவரிடம் சென்று பரிசோதித்தபோது, அவர் இரண்டரை மாதம் கர்ப்பிணியாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். உடனே நாங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப் பொறுப்பான மருத்துவ மாதிடம் சென்று விடயத்தைத் தெரிவித்தோம். கையில் வைக்கப்பட்டுள்ள கருத்தடை சாதனத்தை அகற்றிவிடலாம் என்று அவர் கூறினார். ஆனாலும், இன்று, நாளை என பல நாட்கள் அலைய வைத்தததன் பின்னர் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி போனதும் அதனை எடுத்துவிட்டார்கள்' என்றார் சதீஸ்குமார்.

ஆனால் ஒரு மாதத்தின் பின்னர், கையில் கருத்தடை சாதனம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கருவளையம் ஏற்பட்டு கடும் அரிப்பு ஏற்பட்டிருந்தது. மூன்றாம் நாள் கடும் காய்ச்சல் ஏற்பட்ட பின்னர், அவர் தனது மனைவியை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

'கிளிநொச்சி வைத்தியசாலையில் எனது மனைவிக்கு டெங்கு நோய் எனக் கூறி, யாழ்ப்பாணத்திற்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பினார்கள். அங்கு அவர் மரணமானார். ஆனால் கர்ப்பமாக இருந்தபோது, வைக்கப்பட்ட கருத்தடை சாதனத்தினால் விஷம் ஏற்பட்டு என்னுடைய மனைவி இறந்தார் என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது' என்றார் சதீஸ்குமார்.

விசாரணை
மனைவி மஞ்சுளாவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட மரண விசாரணையின்போது, அவருடைய மரணம் தொடர்பில் தனக்கு ஏற்பட்டிருந்த சந்தேகம் குறித்து சதீஸ் பொலிசாருக்கோ அல்லது மரண விசாரணை அதிகாரிக்கோ எதையும் தெரிவிக்கவில்லை.

அவர்களிடம் சந்தேகம் தெரிவித்தால் மனைவியின் உடலைத் தரமாட்டார்கள், நானும் அங்கேயே இருக்க வேண்டியிருக்கும், இதனால் எனது 3 வயது குழந்தை தனிமையில் இருக்க நேரிடும் என்பதால் நான் எனக்கு ஏற்பட்டிருந்த சந்தேகம் பற்றி அப்போது எதுவும் அவர்களிடம் சொல்லவில்லை. ஆனால் இப்போது, மனித உரிமைகள் அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்றேன்' என்றார் இராமு சதீஸ்குமார்.

இந்த விடயம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக யாழ் மாவட்ட பதில் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவருபன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வேரவில் என்ற கிராமம் உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த பல பெண்கள் ஏற்கனவே கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று வைத்திய அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.