கட்டாய கருத்தடை மூலம் இன அழிப்பா? ஆதாரம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

கிளிநொச்சி , முல்லைத்தீவில்  சில மாதங்களுக்கு முன்னர் கட்டாய கருத்தடை இடம் பெறுவதாக அறிக்கைகள் வெளியாகி இருந்தன. இது சனவரி 2012 முதல் அரசு ஆதரவுடன் படைத்தரப்பின் வற்புறுத்தலினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை இங்கு குளோபல் தமிழ் செய்திகள் ஆதாரத்துடன் பிரசுரிக்கிறது.

Annual health bulletin 2012 S.No 1.21 family planning – new acceptors  இல் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன. முல்லைத்தீவில்  IUD கருத்தடை மருந்தானது 11284   பெண்களுக்கு கருப்பையினுள் உட்செலுத்தப்பட்டுள்ளதுடன்  4694 பெண்களுக்கு Implants என்னும் தோல் ஊடு ஊசிமூலமும் உட்செலுத்தப்பட்டுள்ளது. இவை 5 தொடக்கம் 7 வருடங்கள் உடலில்  கருக்கட்டும் தன்மையை இல்லாமற் செய்கின்றன.  இக்கருத்தடை சாதனம் ஒரு குழந்தையுடைய பெண்களுக்கும்  அதிக எண்ணிக்கையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதுடன் இது மிக உயர் வீதத்தில் காணப்படுவதும் தமிழினம் இரகசியமாக மெல்லக் கருவழிக்கப்படுவதைக் (Genocide by birth control) காட்டுகிறது.

கிளிநொச்சியில் 3921 பெண்களுக்கு நிரந்தர கருத்தடை LRT செய்யப்பட்டுள்ளது. இச் சத்திர சிகிச்சைக்காக பெண் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. அறுவை சிகிச்சை மூலம் கருமுட்டைக் குழாய்களை (Fallopian Tubes) வெட்டி பின்னர் இருமுனைகளிலும் கட்டி விடப்படுவதனால் கருமுட்டையானது கருப்பையினுள் செல்வதை நிரந்தரமாகவே தடுக்கிறது.

இங்கு வியப்பு யாதெனில் பெண்நோயியல் மகப்பேற்றுச் சத்திரசிகிச்சை நிபுணர் இல்லாமலே இச்சத்திர சிகிச்சையைானது சேவை நோக்குடன் இரகசியமான முறையில் இராணுவ வைத்தியரைக் கொண்டு கிளிநொச்சி , முல்லைத்தீவில்  மாவட்டங்களில் செய்யப்பட்டு உள்ளமையாகும். இதைவிட கிளிநொச்சியில் 6 ஆண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலப்பகுதியில் யாழ் பிராந்தியத்தில் வேகமாக முன்னெடுக்கப்பட்ட கட்டாய கருத்தடையை மேற்கொண்ட தாய்சேய் நல பெண் அதிகாரி தமிழ் சிவில் சமூகத்தால் விடுக்கப்ட்ட எச்சரிக்கையை அடுத்து தனது நற் பணியை நிறுத்தியுள்ளார். எனினும் பெரும்பான்மை இனத்தை சார்ந்த சில வைத்தியர்கள் யாழ் பிராந்தியத்தில் கட்டாய கருத்தடையை நிகழ்த்தியதற்கான ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அட்டவணையில் சிவப்பு நிறத்தினால் வட்டமிடப்பட்டுள்ளதைப் பார்க்க.

 

மேலும் விபரங்களுக்கு annual health bulletin 2012 இனைப் பார்வையிட இங்கே அழுத்துக.
www.healthnp.org/progress/pdhs_1.pdf  இவ்வறிக்கை மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் 19129 கருத்தரிக்கக் கூடிய பெண்களில் 3921 பேர் நிரந்தரக் கருத்தடைக் குள்ளாகியுள்ளமை தெரிய வருகிறது.  இது  20.49 %.     19129 பெண்களில் 821 பேரே ஆணுறை அல்லது பெண்ணுறையைப் பயன்படுத்துகின்றனர்.

முல்லைத்தீவில் 14358 பெண்களில் 11284 பேருக்கு Implant உட்செலுத்திகள்  பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை பெரிதும் பாலியல் தொழிலில் ஈடுபடும் தகவுள்ள பெண்களுக்கே உபயோகிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இராணுவ முகாம்களை அண்மித்த பிரதேசங்களில் வடமாகாணத்தில் அதிகம் செயற்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கதே ஆகும்.