எம் இனத்தையே அழிக்கும் பத்தாயிரம் தற்கொலை குண்டுகள் ! தென்னிலங்கையின் சதித்திட்டம்(ஒருபார்வை)

ஒரு பலமான நிலையில் உள்ள எதிரியின் பலத்தைச் சிதறடிக்கவும், அவனின் திட்டங்களை குழப்பித் திணறடிக்க வைக்கவும், தனி ஒருவன் தன் உயிரையே ஆயுதமாக்கி தாக்குதல் நடத்தி, தனது அர்ப்பணிப்பின் மூலம் தனது
அணியினரை வெற்றியை நோக்கி முன்செல்ல நடத்தப்படுபவையே தற்கொலைத் தாக்குதல்களாகும்.

அதாவது ஒரு தற்கொலைப் போராளி தனது உயிர் அர்ப்பணிப்பின் மூலம் பல எதிரிகளைக் கொல்வதுடன் எதிரியின் ஆள்பலத்தையும், மனோ பலத்தையும் சிதறடிக்கும் ஓர் ஒப்பற்ற போர் வடிவமாகும்.

இப்போது யாழ்.குடாநாட்டிலும் பத்தாயிரம் தற்கொலைக் குண்டுகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறோம்.

ஆனால் இந்தத் தற்கொலைக் குண்டுகள் எதிரிகளை அழிப்பதற்கல்ல. எமது இனத்தை அழிப்பதற்கானவை என்பது தான் மனவருத்தமளிக்கும் விடயமாகும்.

அதாவது கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிதண்ணீர் வழங்கும் திட்டத்தைத் துரிதமாக நிறைவேற்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைந்து செயற்பட்டு அதைத் துரிதமாக நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி ஒரு பொது அமைப்பால் மகஜர் அனுப்பப்படவுள்ளதாம்.

அதற்காக சகல உள்ளூராட்சி சபைப் பிரதேச மக்களிடமும் கையயழுத்து சேகரிப்பு இடம்பெறவுள்ளதாம். அதாவது மேற்படி மகஜர் பத்தாயிரம் கையயழுத்துக்களுடன் அனுப்பப்படவுள்ளதாம்.

யாழ்.குடாநாட்டில் குடிதண்ணீர்ப் பிரச்சினை ஒரு சில பகுதிகளில் உண்டு என்பது எவராலும் மறுக்கப்பட முடியாத உண்மை. அந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால் இரணைமடு நீரால் யாழ். குடாநாட்டில் நீர்த் தேவைகளைப் பூரணமாக நிறைவு செய்ய முடியுமா? சுத்திகரிக்கப்பட்ட குளத்து நீரை யாழ்.குடாநாட்டு மக்கள் குடி தண்ணீராகப் பயன்படுத்துவார்களா? வடக்குக்கு இரணைமடு நீரைக் கொண்டு வருவதை விட யாழ்.குடாநாட்டின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வேறு வழியேதுமில்லையா?

அப்படி இரணைமடு நீர் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்படுமானால் இரணைமடு நீரை நம்பி விவசாயம் செய்யும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நிலை என்ன? அணைக்கட்டு உயர்த்தப்படுவதன் மூலம் இரு பகுதி மக்களையும் திருப்திப்படுத்த முடியுமா?

இப்படியான கேள்விகளுக்குப் பத்தாயிரம் தற்கொலைக் குண்டுகளைத் தயாரிப்பதில் தீவிரம் காட்டும் பொதுநல அமைப்பினரால் பதில் சொல்ல முடியுமா? யாழ். குடாநாட்டு மக்களுக்கும், வன்னி மக்களுக்குமிடையே முரண்பாடுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தி தமிழ் மக்களையே பிரித்தாளும் நீண்ட போக்குடைய ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதி இது என நாங்கள் நம்ப முடியாது.

இன்று இந்தியாவில் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் காவிரி நீர்ப் பிரச்சினை கேரளாவுக்கும் தமிழ கத்துக்கும் பெரியாறு அணைப் பிரச்சினை. அப்படியான என்றுமே தொடரக்கூடிய ஒரு பிரச்சினையை கிளிநொச்சிக்கும் யாழ்.குடாவுக்குமிடையே ஏற்படுத்த அடித்தளமிடுகிறார்களா?

இன்றும் கூட கிளிநொச்சி மக்களுக்கு மட்டுமன்றி யாழ்.குடா நாட்டு மக்களுக்கும் இரணைமடுக்குளம் பயன்படுகிறது என்பதைப் பலர் கணக்கில் எடுப்பதில்லை.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் விளைவிக்கப்படும் நெல்லு வடக்கின் பெரும் பகுதி மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது என்பதைப் பலர் கணக்கில் எடுப்பதில்லை.

போர் இடம் பெற்ற காலத்தில் கடுமையான பொருளாதாரத் தடைகள் மத்தியிலும், வடக்கில் தெற்கை விடக் குறைந்த விலையிலும் ஒரே சீரான விலையிலும் அரிசி பெற முடிந்ததற்கு ஒரு காரணம் இரணைமடு, கட்டுக்கரைக்குளம் என்பவற்றினால் விளைந்த நெல்லாகும். அன்றும், இன்றும் மட்டுமல்ல என்றும் வடக்கின் உணவு மையம் வன்னி என்பது ஓர் அடிப்படையான உண்மையாகும்.

இப்படியான நிலையில் இரணைமடு நீரினால் மேற்கொள்ளப்படும் விவசாயம் சிதைக்கப்படுவது முழு வடபகுதி மக்களும் தென்னிலங்கையிடம் உணவுக்கும் கையேந்தி நிற்க வேண்டிய ஒரு நிலையை உருவாக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று கிளிநொச்சியில் 34,000 ஏக்கர் நிலத்தில் காலபோகத்திலும் 17,000 ஏக்கர் நிலத்தில் சிறுபோகத் திலும் நெற் பயிரிடப்பட்டு வருகிறது.

ஆனால் அதிகாரிகளோ காலபோகத்தில் 29,000 ஏக்கரும் சிறு போகத்தில் 10,000 ஏக்கரும் நெல் பயிர் செய்யப்படுவதாகக் கணக்குக் காட்டியுள்ளனர். தற்போது நிலவும் உண்மையான தேவையிலிருந்து 12,400 ஏக்கர் குறைத்தே கணக்குக் காட்டப்பட்டு திட்டங்கள் வகுக்கப்படுகின்றது.

அது மட்டுமன்றி சிறுபோகத்தில் விவசாயிகளை உப உணவுப் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுமாறு ஆலோசனை சொல்லப்படுகிறது. நெல்லுக்கு 4 ஏக்கருக்கு நீர் தேவை. ஆனால் உப உணவுப் பயிர்களுக்கு 1 ஏக்கருக்கு போதுமானதாகும். இதில் மிகுதியாகும் நீரை யாழ்ப்பாணம் கொண்டுபோக முடியும் எனக் கணக்குக் காட்டுகின்றனர்.

அடிப்படையில் நீர் தேங்கி நிற்கக் கூடிய வயல் நிலங்களில் உப உணவு செய்கை பண்ணப்பட முடியாது. நீர் தேங்கினாலோ அதிகமான ஈரப்பற்று இருந்தாலோ அவை துஞ்சிப் போய்விடும்.

அதன் காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தையே எதிர்நோக்க வேண்டி வரும். எனவே சிறுபோ கத்தில் விவசாய நிலங்களில் உப உணவும் பயிர்ச்செய்கை என்பது மிகவும் ஆபத்தாகும்.

தற்சமயம் கூட கிளிநொச்சியின் பல கிராமங்களில் இரணைமடு நீர் ஒரு குறிப்பிட்ட அளவை விடக் குறைந்து விட்டால் குறிப்பாக ஆடி, ஆவணி மாதங்களில் கிணறு களில் நீர் வற்றிவிடும். ஏற்கனவே பரந்தன், பூநகரி, ஆனையிறவு, பாரதிபுரம், மலையாளபுரம் போன்ற இடங்களில் நீர்த்தட்டுப்பாடு உண்டு.

இப்படியாக வடக்கின் விவசாய மையமான கிளிநொச்சியின் விளைச்சலையும் அழித்து அம்மரங்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து அங்கும் குடிதண்ணீர்த் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தி யாழ்ப்பாணத்துக்குக் குடிதண்ணீர் கொண்டு போகத்தான் வேண்டுமா?

உண்மையிலேயே யாழ்ப்பாண மக்கள் குடிதண்ணீரின்றி கஷ்டப்படுகிறார்கள் என்றால் அதை நிவர்த்திக்க வேறு எந்த வழியும் கிடையாதென்றால் என்ன விலை கொடுத்தாவது இரணைமடு நீரை யாழ்ப்பாணம் கொண்டு வரத்தான் வேண்டும்.

மாரி காலத்தில் இரணைமடு நிரம்பி வெளியேறும் ஏராளமான நீர் வீணாகக் கடலில் போய்ச் சேருகின்றது. இந்த நீரை அணைகட்டித் தடுத்து அதை மண்டலாயூடாக தொண்டமானாறு நீரேரியின் தென்முனையில் இறக்கத்தான் திட்டமிடப்பட்டது.

அந்த அடிப்படையில் மண்டலாயில் வெட்டப்பட்ட ஆழமான நீண்ட வாய்க்கால் இப்போதும் அழியாமல் உள்ளது. அதுமட்டுமன்றி நீரேரியில் கடல்நீர் புகுந்து விடாமலிருந்து செல்வச்சந்நிதி கோயிலின் பின்னால் ஓர் அணை கட்டப்பட்டிருப்பதை நாம் காணலாம். இவ்வாறே செம்மணியிலும் கூட ஒரு அணை கட்டப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி அந்த நீரேரியை நன்னீராக்குவதன் மூலம் யாழ். குடாநாட்டு நிலத்தடி நீர் உவராவதைத் தடுத்து நிறுத்த முடியும். அது தொடர்பாக எவரும் அக்கறை காட்டுவதில்லை. பத்தாயிரம் கையயழுத்து சேகரிப்பதுமில்லை.

யாழ்ப்பாணம் கோயில்கள் நிறைந்த பிரதேசம். ஒவ்வொரு கோயிலுக்கும் கேணிகளும் குளங்களும் உண்டு. அதுமட்டுமன்றி வயல்கள் மத்தியிலும் ஒவ்வொரு குளங்கள் உண்டு. அவற்றையயல்லாம் சேறள்ளி, துப்புரவு பண்ணி மழை நீரைத் தேக்கி வைத்தால் கூட நமது நிலத்தடி நீரைப் பாதுகாக்க முடியும்.

கிணறுகளில் மலக் கழிவுகள் சேர்கின்றன எனவும் சுன்னாகம் நீர் விநியோகக் கிணறுகளில் கழிவு ஒயில் கலக்கிறது எனவும் கூறப்படுகிறது. மலசலகூடங்கள் கிணற்றிலிருந்து 30 அடிக்கு அப்பால் சரியான திசையில் கட்டப்பட்டால் இந்தப் பிரச்சினையே வராது.

அதை உள்ளூராட்சி சபைகளே சரியாகக் கண்காணித்து நடைமுறைப்படுத்த முடியும். அதுமட்டுமன்றி இன்றைய நகரமயமாகும் போக்கு வெகு விரைவில் பொது கழிவ கற்றும் முறையை உருவாக்கும். அப்போது இந்தப் பிரச்சினை தானாக நின்று விடும்.

சுன்னாகம் நீர் விநியோகக் கிணறுகளில் கழிவு ஒயில் கலக்கிறது என்றால் அதைத் தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்வதை விட்டு இரணைமடுவிலிருந்து நீர் கொண்டு வருவது என்பது எவ்வளவு பரிகாசத்துக்குரியது. அப்படியா னால் சுன்னாகம் நீரை அப்படியே பாழடிக்க அனுமதிக்கப் போகிறார்களா?

இந்தப் பகுதிகளில் நீரில் மனித உடலுக்குத் தேவையான அத்தனை கனிம உப்புகளும் உள்ளன என்பதை நாம் மறந்துவிட முடியாது. அதேவேளையில் இரணைமடு நீரின் குடிதண்ணீர்த் தகைமை பற்றியும் நாம் ஆலோசிக்க வேண்டும்.

இரணைமடுவுக்கு வரும் நீர் அதன் மேற்பகுதியிலுள்ள 300 சிறு குளங்களிலிருந்தும் அவற்றில் வயல்களிலிருந்துமே வருகின்றது. அதில் நைதரசன் அளவுக்கு அதிக மாகவே இருக்கும். அது குடிக்க உதவுமா என்பதுதான் கேள்வி?

அடிப்படையில் யாழ்.குடாநாட்டில் நீர் மாசடைவதைத் தடுக்கவும் நன்னீரைப் பெற்றுக் கொள்ளவும் வழியிருந்தபோதும் ஏன் அவற்றை விடுத்து அவசர அவசரமாக இரணைமடு நீரைக் கொண்டு வரத்துடிக்கின்றனர்.

ஒன்று வடபகுதி மக்கள் தங்கள் உணவுத் தேவையை சொந்தக் காலில் நின்று பூர்த்தி செய்யும் நிலையைச் சிதைப்பது. இரண்டு யாழ்.மக்களுக்கும் வன்னி மக்களுக்கும் முரண்பாடுகளை ஏற்படுத்தி மோதல்களை உருவாக்கி அவர்களை பிரிந்தாள்வது.

அதனால்தான் இரணைமடு நீரை யாழ்ப்பாணம் கொண்டு வர வேண்டும் எனப் போடப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் எம் இனத்தையே அழிக்கும் ஒவ்வொரு தற்கொலைக் குண்டுகள்.

                                                                                     யாழ் உதயன் நாளிதழ்
                                                                                   சந்திரசேகர ஆசாத்