யுத்தத்தினால் இறந்தவர்கள் மற்றும் மாவீரர்களின் நினைவுகூர்வது தொடர்பில் சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி ஆகிய பிரதேச சபைகள் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் !

இலங்கையில் யுத்தத்தினால் இறந்தவர்கள் மற்றும் யுத்த மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப்புலி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் நினைவுகூர்வது தொடர்பில் சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி ஆகிய பிரதேச சபைகள் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் இராணுவத்தின் நெருக்கடியை அதிகரிக்கச் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாகவே மாவீரர்கள் உட்பட யுத்தத்தினால் இறந்தவர்கள் அனைவரையும் நினைவு கூர்வதற்குரிய ஏற்பாடுகளை வடமாகாண சபை செய்து தர வேண்டும் என்ற பிரேரணையைத் தாங்கள் சாவகச்சேரி பிரதேச சபையில் கொண்டு வந்து நிறைவேற்றியதாக அந்த சபையின் உறுப்பினர் சிறிஸ்கந்தராஜா சிறிரஞ்சன் தெரிவித்தார்.


பிரச்சினைக்குரிய இந்தப் பிரேரணை குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஆயினும் கூட்டமைப்பின் தலைமை இதைப்பற்றி அறிந்தபின் தங்களைக் கேட்டபோது அதற்கான விளக்கத்தை அளித்ததாகவும் சிறிரஞ்சன் கூறினார்.

அதேநேரம் இந்தப் பிரேரணையைக் சபையில் கொண்டு வந்து நிறைவேற்றியதற்காக உறுப்பினர் சிறிரஞ்சன் சாவகச்சேரி பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

மூன்று மணித்தியாலங்களாகத் தன்னைப் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்த பொலிசார் இந்தப் பிரேரணையைக் கொண்டு வருவதில் பின்னணியில் இருந்து எவரேனும் செயற்பட்டார்களா என்பதைக் கண்டறிய பொலிசார் முயன்றிருந்ததாகவும் சிறிரஞ்சன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபையினர் ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தை சிரமதானத்தின் மூலம் துப்பரவு செய்வதற்குத் தீர்மானம் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனையடுத்து அந்த இடத்தைச் சுற்றிலும் பெரும் எண்ணிக்கையான பொலிசார் நிறுத்தப்பட்டு, அந்த இடத்தை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
'இத்தகைய நடவடிக்களுக்கு இது உகந்த நேரமல்ல'--ததேகூ

இந்த நிலைமைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், எந்த நடவடிக்கையானாலும், எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் இராணுவ நெருக்குவாரங்களை அதிகரிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும் என தெரிவித்தார். அந்த வகையிலேயே இத்தகைய நடவடிக்கைகளுக்கு இது உகந்த நேரமல்ல என்று தான் குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் மாவீரர்கள் உட்பட யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூர வேண்டியது முக்கியம். அதனை எவரும் தடுக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், யுத்தத்தில் இறந்த அனைவரையும் நினைவுகூருகின்ற நினைவு மண்டபம் ஒன்றை அமைத்து இறந்தவர்களை மக்கள் சரியான முறையில் நினைவு கூர்வதற்கான நடவடிக்கை மாகாண சபையின் மூலம் எடுக்கப்பட முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்தவிடயம் குறித்து கருத்து வெளியிட்ட மூன்று மாவீரர்களின் தாயராகிய பெண்மணி ஒருவர், போராளிகளினதும், இறந்தவர்களினதும், ஆன்மா சாந்தியடைவதற்காக அஞ்சலிகளும் நினைவு நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.

ஆயினும் இந்தச் செயற்பாட்டினால் இராணுவத்தினர் மூலம் தீங்கு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், , இந்தப் பகுதியில் போரின்போது கொல்லப்பட்ட போராளிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் பொதுவான ஒரு அஞ்சலி நினைவிடம் கட்டப்படவேண்டும் அதுவே பொதுமக்கள் தங்களது இனவிரக்கச் செயல்பாட்டை வெளிப்படுத்த அனுமதிக்கவேண்டும் என்று கூறுகிறார் உளவியல் மருத்துவர் டாக்டர் எஸ்.சிவதாஸ்.
செய்தி:பிபிசி தமிழோசை.