தாய் மண் உறவுகளே ! எச்சரிக்கை வேண்டுகோள் ... இப்படியும் நடக்கின்றது! ஏமாற்றுப் பேர்வழிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்!
நேற்று (12.10.2013)நண்பகல் அளவில் நபர் ஒருவருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பெயரைக் கூறி அதிலிருந்து பேசுவதாகவும், ஏற்கனவே பல தடவைகள் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், எனினும் தொடர்பு கொள்ளாத காரணத்தினாலேயே தொடர்பு கொள்வதாகவும் அதன்படி ரீலோட் செய்ததன் காரணமாக ரூபா 500,000 பரிசு கிடைத்துள்ளதாகவும், எனவே அந்தப் பணத்தை வங்கியில் வைப்பிலிட அடையாள அட்டை போட்டோ கொப்பியையும், வங்கி இலக்கத்தையும் அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
உடனே குறித்த நபர் கேட்டவாறே தனது அடையாள அட்டை மற்றும் விபரங்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் கையில் வெள்ளைத்தாள் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பணம் பெற்றுக் கொள்வற்கு நன்றி தெரிவிப்பதாக எமக்கு கடிதம் ஒன்றை எழுதி உடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வையுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, நாங்கள் கொடுக்கும் இலக்கத்திற்கு உடனடியாக 4200/= ரூபாவை ஈசி கேஷ் மூலம் அனுப்பி வையுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 15 நிமிடத்தில் அனுப்பி வைத்தால் மாத்திரமே உடனடியாக ரூபா 500,000 பெற்றுக்கொள்ள நாம் "பின்" இலக்கத்தைத் தெரிவிப்போம். நீங்கள் திங்கட்கிழமை குறித்த வங்கிக்குச் சென்று பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பிரபல நிறுவனத்தில் மக்கள் தொடர்பாடல் போன்றே சிங்களத்திலும், தமிழிலும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறெனினும், காசு கேட்ட மாத்திரத்தில் குறித்த நபர் இது ஏமாற்று நாடகமென்பதைப் புரிந்து கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஏற்கெனவே பேசிய இலக்கத்திற்கு தொடர்பு கொண்டபோது எந்தவிதமான பதிலையும் காணவில்லை.
இது போன்று பொலிஸார் முதல் பலருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாகவும் பலர் ஏமாந்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே மக்கள் இந்த ஏமாற்றுப் பேர்வழிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது மிகவும் அத்தியாவசியமாகும்.